மலாய்க்காரர் ஒற்றுமைக்காக அம்னோ மற்றும் பாஸுடன் சேர்வீர்- மகாதிருக்கு மாட் ஹசான் அழைப்பு

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலாய்க்காரர் ஒற்றுமையின் பொருட்டு பக்கத்தான் ஹரப்பானிலிருந்து பெர்சத்துக் கட்சியுடன் வெளியேறி அம்னோ, பாஸ் கட்சிகளுடன் இணைய வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகம்மட் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.

“அம்னோவும் பாஸும் இதுகாறும் சொல்லி வந்தது உண்மைதான் என்பதை காங்கிரஸ் மாருவா மலாயு உறுதிப்படுத்தியுள்ளது.

“அதாவது பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் கூட்டரசின் சமயம் என்ற இஸ்லாத்தின் நிலையும் மலாய்க்காரர்களுக்கும் மற்ற சுதேசி மக்களுக்கும் இருந்த முக்கியத்துவமும் மங்கி மறைந்து வருகிறது.

“கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் கொண்டுள்ள இந்த முடிவை மகாதிரும் ஒப்புக்கொள்கிறார். அதற்குக் காரணம் என்று மகாதிர் மலாய்க்காரர்கள் மற்றும் அம்னோமீது பழி போட முயன்றாலும் ஹரப்பான் அரசாங்கம்தான் அதற்குக் காரணம் என்பதை அவரால் மறுக்க முடியாது”, என முகம்மட் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“மகாதிர் உண்மையிலேயே மலாய்க்காரர்கள்/முஸ்லிம்கள் வலுவான அர்சியல் சக்தியாக உருவாவதைக் காண விரும்பினால், அவர் அம்னோ, பாஸுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும்.

“நாளையே அவர் அம்னோ, பாஸ் அத்துடன் சாபா, சரவாக் நண்பர்களின் ஒத்துழைப்புடன் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும்”, என்றாரவர்.