பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி அவருக்கும் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் சச்சரவு முற்றியதை அடுத்து தனிக் கட்சி அமைக்க விரும்பியதாக பிகேஆர் நிறுவனர் சைட் உசேன் அலி கூறினார்.
அஸ்மின் பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறியதும் செய்வதற்குத் திட்டமிட்டிருந்த மூன்று காரியங்க்களில் புதுக் கட்சி அமைப்பதும் ஒன்று என சைட் உசேன் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
“முதலில் பெர்சத்துவில் சேர்வது அவர் திட்டம். ஆனால் அவரது தரப்பில் மலாய்காரர்- அல்லாதாரும் இருந்ததால் அது முடியாது போயிற்று.
“இரண்டாவதாக, கெராக்கானில் இணைவது. ஆனால், கெராக்கான் பிஎன்னுடன் நெருக்கமாக இருப்பது அவரது தரப்பில் சிலருக்கு பிடிக்கவில்லை.
“அதன் பின்னர் புதுக் கட்சி அமைக்க நினைத்தார்கள்”, என்றாரவர்.
இதன் தொடர்பில் பிகேஆர் உதவித் தலைவரும் அஸ்மின் அலி ஆதரவாளருமான ஸுரைடா கமருடினை வினவியதற்கு “அது பற்றிப் பேசியதே இல்லை என்றார்.
அஸ்மின் ஆதரவாளர்களான வேறு சிலரும் புதுக் கட்சி அமைக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுவதை மறுத்தனர்.