ஊழல் தலைவிரித்தாடுகிறது, சேதத்தை மக்கள் உணர வேண்டும்

கி.சீலதாஸ் – மலேசிய அரசு நாட்டு நலனில் காட்டும் அக்கறை கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது என்பதில் மலேசியர்கள் மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் கவனிக்கிறார்கள் என்பதை உணர மறுப்பது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

நாட்டு நலன் என்றால் என்ன? நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். நாட்டின் சுபிட்சத்திற்கு அடிப்படையாக அமைவது என்ன? மக்களிடையே ஒற்றுமை – எல்லா மக்களும் நலனுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும். அந்த நிலையை உருவாக்கித் தர வேண்டியது அரசின் கடமை.

வேற்றுமைகள் இருந்தாலும் அவை மக்களின் நலனைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல, நாட்டு நலன், சமூகங்களின் நலன் ஆகியவைகளைக் கவனத்தில் கொண்டு சுமுகமான தீர்வு காண்பதுதான் தவிர்க்க இயலாத வேற்றுமைகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை.

அதாவது வேற்றுமைகளைப் பெரிதுப்படுத்தி கேவலப்படுத்துவது, ஏளனம் செய்வது போன்ற தரக்குறைவான நடவடிக்கைகளை, பேச்சுக்களைத் தவிர்த்து வேறுபாடுகள் இருக்கும் என்பதை ஏற்று வாழ்வதுதான் நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.

எல்லா வேறுபாடுகளையும் அனுசரித்து பகைமை, வெறுப்பு போன்ற உணர்வுகளைப் பெரிதுப்படுத்தாது வாழ்வது சுபிட்சத்திற்கு அஸ்திவாரம்.

நாடு இயற்கை செல்வங்களைக் கொண்டிருந்தால் மட்டும் சுபிட்சத்திற்குப் பாதிப்படையாது என்று நினைப்பது தவறு. செழிப்பு மிகுந்த நாடுகளில் சட்டம், நீதி பாழடைந்து காணப்பட்டால் அநீதி தலைவிரித்தாடும்.

சட்டத்திற்கும் நீதிக்கும் மதிப்பு அளிக்கப்படாமல், அவற்றைத் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாட்டின் செல்வம் அழிவது திண்ணம். இதற்குக் காரணிகளாக இருப்பவர்கள் யார்?

சமீப கால அரசியல் வாழ்வை, நாட்டு நிர்வாகத்தை, அதிகாரத்தில் இருப்பவர்களால் கையாளப்படும் ஆட்சி முறையைக் கவனிக்கும் போது ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பது உறுதியாகிவிட்டது.

மக்கள் நேர்மையாக உழைத்து வாழ முடியும் என்ற நம்பிக்கை யாவும் சில பேராசைக்கார அரசியல்வாதிகள் மற்றும் அரசு துறைகளை நிர்வகிக்கும் அதிகாரிகளின் கொடுமைமிகு நேர்மையற்ற அயோக்கியத்தனத்தால் ஏமாந்து அவதிக்குள்ளாக்கப்பட்ட நிலையை நாம் காண்கிறோம்.

இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும் அல்லவா? மக்கள் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும், நீதிக்குப் பணிய வேண்டும். இதுதான் நேர்மையான அரசியல் வாழ்க்கை. மக்கள் இதை உணர்ந்துள்ளார்களா? என்பதே நம்மை வருத்தும் பிரச்சினை.

மலேசியாவின் செல்வத்தைச் சூறையாடுவதில் அரசு பொறுப்பில் இருப்போரின் கைவரிசை அச்சுறுத்துகிறது. பொருளாதாரக் குற்றவியல் நடவடிக்கைகளால் ஏறத்தாழ 55 இலட்ச கோடி ரிங்கிட்டை 2018ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை மலேசியா இழந்திருக்கிறது. இந்தத் தொகை ஊழலை மட்டும் பிரதிநிதிக்கவில்லை. மாறாக, பல குற்ற நடவடிக்கைகளால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

குற்றவியல் செயல்கள் நாட்டில் பரவலாக நிகழ்கிறது என்றால் அமலாக்கத்துறைகள் கவனக்குறைவா அல்லது கண்களை மூடிக் கொண்டால் கிடைக்கும் ஆதாயத்தில் குறியா? இதுவும் ஊழல்தானே! இந்த உண்மையை மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

காரணம், இது அவர்களைப் பாதிக்கவில்லை என்று நினைக்கிறார்கள். நாடு தன் கடன் பொறுப்புகளை அல்லது இழப்புகளைச் சமாளிக்க முடியாத நிலையை அடைந்தால் அது மக்களைப் பாதிக்கும்.

இதை உணர மறுப்பது ஏன்? அல்லது மக்கள் இதைப் பற்றி எல்லாம் கவனிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் பல பிரச்சினைகளை எழுப்பிவிட்டால், குறிப்பாக இன, சமய உணர்ச்சிகளைச் சீண்டிவிடும் பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டால் மக்களின் கவனம் அவற்றில் பாய்ந்துவிடும்.

ஏற்பட்டு கொண்டிருக்கும் பொருளாதாரச் சேதத்தைக் குறித்த மக்களின் கவனம் குறைவாகவே இருக்கும். இப்படிப்பட்ட அரசியலின் ஆயுள் கம்மி என்பதை உணர்ந்தால், ஆனால், அதை உணரத் தயங்கும் அரசியல்வாதிகளின் காலம் இது என்றால் அதுவும் சரியான கருத்தே.

இப்பொழுது அடிக்கடி எழுந்து கொண்டிருக்கும் இன, சமய பிரச்சினைகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதோடு நேர் வழியில் சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்றாலும் தகும்.

இன, சமய பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம். ஒரு பிரச்சினையைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்ற அறிவுரையை நல்கும் அரசு, பிரச்சினையைக் கிளப்புவது யார்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? தயக்கம் ஏன்? மக்கள் கேட்கிறார்கள். விளக்கம் தேவை. அரசுக்குப் பதில் தரும் கடமை உண்டு.

மாநில அரசு மற்றும் நடுவண் அரசு ஆகியவை சட்டமுறை ஆட்சி என்று சொன்னால் போதாது. செயலில் காட்ட வேண்டும் என மக்கள் கோருவதில் நியாயம் உண்டு.

அரசு அந்தச் சட்டமுறை ஆட்சி கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம். பிரச்சினைகள் இல்லாத நாடும் இல்லை, சமுதாயமும் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.தேவையில்லா மூர்க்கத்தனமான முறையில் பிரச்சினைகளை எழுப்புவோரைக் கட்டுப்படுத்துவதோடு கண்டிக்க வேண்டும். தண்டிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் எல்லோரும் சுபிட்சமாக வாழ முடியும்.

ஒரு சமுதாயத்தின் கண்ணீர் மற்ற சமூகத்துக்குப் பண்ணீராக இருப்பதைத் தவிர்ப்பதே நியாயமான ஆட்சி.

நாட்டுத் தலைவன் என்றால் அவர் எல்லா மக்களின் தலைவராக நியாயமான முறையில் செயல்பட வேண்டும். வோட்டு வங்கியைக் கவனத்தில் வைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் இறங்குவதும், இறைவனின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற சுயநல அணுகுமுறை நல்லாட்சிக்கு உத்திரவாதம் அல்ல. இதை இக்காலத்து தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.