நான் தவறு செய்யவில்லை, அதனால் அஞ்சத் தேவையில்லை- ரோனி லியு

டிஏபி-இன் சுங்கை பிலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைச் சந்திக்கத் தயார் என்று அறிவித்துள்ளார். மனசாட்சியின்படி எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார் அவர்.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைக் குறைகூறியதற்காகவும் பெர்சத்துக் கட்சியைத் தள்ளிவைத்து பக்கத்தான் ஹரப்பானின் மற்ற கட்சிகள் அரசாங்கம் அமைக்க முடியும் என்று கூறியதற்காகவும் ரோனிமீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஏபி அறிவித்துள்ளது.

அதற்கு எதிர்வினையாற்றிய ரோனி, “ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். மக்கள் சார்பில் பேசும் பொறுப்பு எனக்கு உண்டு”, என்றார்.

டிஏபி நெடுகிலும் வலியுறுத்தி வரும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் நோக்கில்தான் அவ்வாறு கூறியதாகவும் அவர் சொன்னார்.

“கட்சி ஒழுங்குக் குழுவாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி பேச்சுச் சுதந்திரத்தைத் தற்காத்துப் பேசத் தவற மாட்டேன்”, என்றாரவர்.

தன்மீது நடவடிக்கை எடுப்பது நியாயமென்றால் பிரதமர் பதவியை மாற்றிவிட பக்கத்தான் ஹரப்பான் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு எதிரான கருத்தை முன்வைத்த அஸ்மின் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் ரோனி வினவினார்.