செம்பனை எண்ணெய் விவகாரம் ஆர்சிஇபி பேச்சுகளைப் பாதிக்காது: லெகிங் நம்பிக்கை

இந்தியாவுடனான செம்பனை எண்ணெய் விவகாரம் ஆண்டு இறுதியில் முடிவுக்கு வரவுள்ள வட்டார பொருளாதாரப் பங்காளித்துவ(ஆர்சிஇபி) பேச்சுகளைப் பாதிக்காது என்று மலேசியா நம்புகிறது.

அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் டேரல் லெய்கிங், அக்டோபர் 10திலிருந்து 12வரை பெங்கோக்கில் நடைபெற்ற ஆர்சிஇபி அமைச்சர்நிலை மாநாட்டின்போது இந்தியாவின் வர்த்தக, தொழில் அமைச்சர் பியுஷ் கோயாலுவைச் சந்தித்து செம்பனை எண்ணெய் விவகாரம் குறித்துப் பேசியதாகக் கூறினார்.

“பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதுபோல், இதுவரை இந்தியாவின் தனியார் துறைதான் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இந்திய அரசாங்கம் எதுவும் சொல்லவில்லை.

“நாம் பேச வேண்டியது அவர்களின் அரசாங்கத்துடன்தான். எது எப்படியோ, செம்பனை எண்ணெய் வர்த்தகத்தை நினைத்தவுடன் நிறுத்திக்கொள்ள முடியாது. அது பலரைப் பாதிக்கும். மலேசியர்கள் மட்டுமல்ல, உலகச் சந்தையில் அதை விற்பனை செய்வோரும், ஏன் இந்தியாவும்கூட பாதிக்கப்படும்”,என்றவர் 2019 தேசிய ஏற்றுமதி நாளைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.