தீபாவளி என்றாலே புத்தாடை, முறுக்கு, பட்டாசு, மத்தாப்பு – இவற்றை அடிப்படையாகக்கொண்டுதான் அமைந்திருக்கும், முன்பொரு காலக்கட்டத்தில். இவைகளோடு, ‘மதுபானம்’ என்றொரு அரக்கனும் ஒட்டிக்கொள்வான் – பல இல்லங்களில்.
ஆனால் காலத்தின் பரினாம வளர்ச்சிக்கு ஏற்ப இந்தத் தீபத் திருநாள் கொண்டாட்டங்கள் பலவகையிலும் பெரிய அளவிலான மாற்றங்களைக் கண்டுள்ள போதிலும், அட்டைப் போல ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தக் மது அரக்கனிடமிருந்து நம் சமுதாயத்தின் ஒரு சாரார் இன்னமும் விடுபட முடியாமல் சிக்கித் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
புத்தாடைகள், முறுக்கு வகைகள், வானவேடிக்கை மற்றும் பலதரப்பட்ட உணவு வகைகளுக்கு ஈடாக மதுபானத்திற்கும் பெருமளவில் பலர் செலவிடுகின்றனர் என்பது மிகவும் வருத்தத்திற்குறிய உண்மையாகும்.
மலேசிய இந்தியர்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 750 மில்லியன் ரிங்கிட்டை மதுபானத்திற்கு செலவிடுகின்றனர் என ஆய்வுகள் காட்டுகின்றன. அந்தத் தொகையில் குறைந்த பட்சம் 20%, அதாவது கிட்டத்தட்ட 150 மில்லியன் ரிங்கிட் தீபாவளிப் பண்டிகையின் போது மதுவில் கரைகிறது என்ற புள்ளி விவரம் நமக்கு அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி அவமானத்தையும் ஏற்படுத்துகின்றது.
இந்நாடாடில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய சமுதாயமாக இருந்துவரும் நமக்கு, அவலத்துக்குறிய இந்த புள்ளி விவரம் தேவையில்லாத ஒரு இழுக்கு என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தத் தொகையில் 10 விழுக்காட்டினை ஒதுக்கினால் கூட உயர் கல்வியைத் தொடர முடியாமல் பரிதவிக்கும் வசதிக்குன்றிய நம் இன மாணவர்களுக்கு உதவி செய்து, கூடுதலாக குறைந்த பட்சம் 100 புதிய பட்டதாரிகளை உருவாக்கி விடலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளிலும் அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலும் இடம் கிடைக்கவில்லையே என போராடிப் போராடி ஆதங்கப்பட்டு அலுத்துப்போய்விட்ட நமக்கு இது சற்று ஆறுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க, ‘வருசத்தில் ஒருநாள்தானே’ என வாதிடுவோரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். பீர் அருந்துவதால் சிறுநீரகங்களுக்கு நல்லது என்றும் கூட தங்களுடைய குடி பழக்கத்திற்கு சிலர் நியாயம் கற்பித்துக்கொள்கின்றனர். மருத்துவ ரீதியில் இது நிரூபிக்கப்படவில்லை என்றால் கேட்கவா போகிறார்கள்!
மரண வாசலில் இருந்த நரகாசுரன் என்ற அரக்கன், ‘உடல் முழுவதும் எண்ணெய்த் தேய்த்துக் குளித்து இந்த நாளை சந்தோசமாகக் கொண்டாடுங்கள்’ என்று மட்டுமே சொன்னார். கூடவே மது அரக்கனை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதாக நமக்குத் தெரியாது.
எது எப்படியாயினும், ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பதனை அவர்கள் அனைவரும் கண்டிப்பாக உணரத்தான் வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு உலகம் முழுவதும் சுமார் 30 இலட்சம் பேர் மது குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளில் மரணமடைகின்றனர்.
மது பழக்கத்திற்கு அடிமையாகி, அதனால் வரும் நோய்கள் மட்டுமின்றி, குடி போதையில் வாகனமோட்டுவதால் ஏற்படும் விபத்துக்களில் மரணமடைவோரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும். இவர்கள் மட்டுமின்றி, மது அருந்தாதவர்களும் கூட இவர்களினால் விபத்துக்களில் மரணிப்பது நம்மால் ஜீரணிக்க முடியாத, மிகவும் வேதனைக்குறிய ஒன்று.
ஆக இந்தத் தீபத்திருநாளின் குதூகலத்தை குடும்பத்தாருடன் முழுமையாக அனுபவிப்பதற்கு, மது என்ற அந்த புதிய நரகாசூரன் எவ்வகையிலும் இடையூராக இருக்காமல் பார்த்துக்கொள்வது நம் அனைவருடைய கடமையாகும். தீபாவளியின் போது “மது வேண்டாம்” என்று சொல்வோமா?