டாக்டர் மகாதிர் முகம்மட் உரிய காலத்தில் பிரதமர் பதவியைத் தம்மிடம் ஒப்படைப்பார் என்று அன்வார் இப்ராகிம் உறுதியாக நம்புகிறார். சிலர் தன்னை முந்திக்கொண்டு பிரதமர் ஆக ஆசைப்பட்டாலும் அது நடவாது என்றாரவர்.
துருக்கி நாட்டு தொலைக்காட்சி டிஆர்டி வொர்ல்ட் -டுக்கு அளித்த நேர்காணலில் அன்வார் அவ்வாறு கூறினார்.
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி அடுத்த பிரதமராக ஆசைப்படுவதாகக் கூறப்படுவது பற்றி பிகேஆர் தலைவரான அன்வாரிடம் கேட்கப்பட்டது.
“ஒருவர் பிரதமர் ஆக நினைப்பது குற்றமல்ல. ஆனால், அதற்கு (எம்பிகளின்) பெரும்பான்மை ஆதரவு தேவை.
“கடந்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில்கூட பிரதமர் பதவிக்கு வேறு யாருடைய பெயரும் பரிசீலிக்கப்படவில்லை”, என்றாரவர்.
அஸ்மின் அவர் பிரதமர் ஆகும் விருப்பத்தை எப்போதாவது வெளிப்படுத்தியுள்ளாரா என்று வினவப்பட்டதற்கு அப்படி அவர் சொன்னதில்லை என்று அன்வார் பதிலளித்தார்.
“அவருடைய தரப்பில் சிலர் அப்படிக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.
அத்துடன் பக்கத்தான் ஹரப்பான் ஒப்பந்தப்படி மகாதிர் பிரதமர் பதவியைத் தம்மிடம் ஒப்படைப்பார் என்பதில் தமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை என்றும் அன்வார் கூறினார்.