கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் நீதிமனறத்தில் நிறுத்த வேண்டும் அல்லது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர்கள் தீபாவளிக்கு முன்னதாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்களின் மனைவிமார் புக்கிட் அமானுக்கு வெளியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கொட்டும் மழையில் அவர்கள் உண்ணாவிரதம் இருப்பதைக் காண வருத்தமாக உள்ளது என்றாரவர்.
“ஆதாரம் இருப்பதாக சொல்லப்படுவதால் அவர்களை இன்னமும் சோஸ்மாவில் பிடித்து வைத்திருப்பது ஏன்?, என்று சந்தியாகு வினவினார்.
“ஒன்று அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றஞ்சாட்ட வேண்டும் அல்லது உடனடியாக விடுவிக்க வேண்டும்”, என்றாரவர்.
12பேரையும் தடுத்து வைக்க வலுவான ஆதாரங்கள் இருப்பதாக போலீசாரும் உள்துறை அமைச்சரும் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.