சுதேசி -அல்லாத ஒரு மில்லியன் பேருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது- பிரதமர்

நாடு சுதந்திரம் பெற்றபோது சுதேசி -அல்லாத, குடியுரிமை பெறத் தகுதியற்ற ஒரு மில்லியன் பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் கூறுகிறார்.

தம்முடைய வலைப்பதிவில் அவ்வாறு குறிப்பிட்ட மகாதிர் அது குறித்து மேலும் விவரிக்கவில்லை. ஆனால் அதே பதிவில் அவர், மலாய் தன்மான காங்கிரஸ் ஒரு இனவாத மாநாடு என்று குற்றஞ்சாட்டப்படுவதை நினைத்தால் மனம் கசக்கிறது என்றார்.

“ஐரோப்பிய நாடுகளின் முன்னாள் காலனிகள் விடுதலை பெற்றபோது பலவற்றில் அங்கிருந்த சுதேசி -அல்லாத மக்கள் வெறுத்தொதுக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. பலர் தாக்கப்பட்டனர்.

“இந்நாட்டில் அப்படியெல்லாம் நடக்கவில்லை. சுதேசி- அல்லாத மக்கள் இந்நாட்டுக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். ஒரு மில்லியன் மக்களுக்கு உரிய தகுதி இல்லை என்றபோதிலும் குடியுரிமை கொடுக்கப்பட்டது.

“இந்த நாட்டில் சுதேசி மக்கள் அவர்களுக்கென ஒரு கூட்டத்தைக் கூட்டினால் அவர்களை இனவாதிகள் என்று அழைக்கப்படுவதைக் காண மனம் வருந்துகிறது.

“இப்படி எழுதுவதற்காக நானும்கூட இனவாதி என்று முத்திரை குத்தப்படலாம்”, என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.