இட்ரிஸ் ஹருன்: அம்னோ அட்லி ஸஹாரியை வெளியேற்ற உதவும் ஆனால் பெர்சத்துவை ஆட்சியில் அமர்த்த உதவாது

மலாக்கா முதலமைச்சர் அட்லி ஸஹாரியைப் பதவி இறக்க வேண்டுமா அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளனர் என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் இட்ரிஸ் ஹருன் கூறுகிறார்.

ஆனால், பெர்சத்துவை ஆட்சியில் அமர்த்த அவர்கள் உதவ மாட்டார்கள் என்றாரவர்.

“முதலில், பின்வாசல் வழியாக அரசாங்கம் அமைக்கும் நோக்கத்துடன் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் நோக்கத்துடன் யாரும் என்னைச் சந்தித்ததில்லை. அப்படிப்பட்ட எண்ணம் இருப்பதாக எனக்குத் தெரியவும் தெரியாது.

“பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் (முகம்மட்) ரஃபிக் (நஸிமொஹிடீன்) என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்கள்…. நான் எதற்காக என்று வினவினேன்”, என்று மலாக்காவின் முன்னாள் முதல்வர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அம்னோ வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான பெர்சத்துவின் ரஃபிக், மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 13 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச விரும்பினாராம்.

முதலில் அவர் மலாக்கா அம்னோ தலைவர் அப் ரவுப் யூசோவைச் சந்தித்திருக்கிறார். அச்சந்திப்பை அடுத்து மற்ற அம்னோ உறுப்பினர்களுடன் பேசும் முயற்சி கைவிடப்பட்டது.

அட்லி வலுவற்ற தலைவர் என்பதால் ரஃபிக் அவரைப் பதவி இறக்க முயல்வதுபோல் தெரிகிறது என இட்ரிஸ் கூறினார்.

“அட்லி பலமில்லாதவர். ஆட்சிக்குழுவைக்கூட அவரால் கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள முடியவில்லை. அவரது கட்சி (அமனா) இரண்டு இடங்களைத்தான் வைத்துள்ளது. டிஏபி (எட்டு இடங்கள்) தயவில்தான் அவர் ஆட்சி செய்கிறார்.

“ஆதலால், நடப்பு அரசைக் கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அம்னோ அதற்கு உதவும், ஆனால், ரஃபிக்கை முதல்வராக்குவதுதான் நோக்கம் என்றால் உதவாது”, என்றாரவர்.