இப்ராகிம் அலியின் பார்டி பூமித்ரா பெர்காசா மலேசியா(புத்ரா)-வின் தஞ்சோங் பியாய் தொகுதி எதிர்வரும் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஎன் மலாய்க்காரரை வேட்பாளரைக் களமிறக்காவிட்டால் அது போட்டியில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
மூன்று நாள்களுக்கு முன்புதான் இப்ராகிம், இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் 15வது பொதுத் தேர்தலில் கவனம் செலுத்தலாம் என்றும் புத்ரா உச்சமன்றம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருந்ந்தார் ஆனால், இப்போது இப்படி ஓர் அறிவிப்பு வந்துள்ளது.
நேற்று மலாய் மெயிலிடம் பேசிய தஞ்சோங் பியாய் புத்ரா தொகுதித் தலைவர் ஸ்ஹாருடின் கமிஜான், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிக்காத மலாய்க்காரர்களுக்கு வேறொரு விருப்பத் தேர்வைக் கொடுக்க முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.
“கட்சி இடைத் தேர்தலில் போட்டியிடாது என்று இப்ராகிம் அலி அறிவித்தது உண்மைதான். ஆனால், பிஎன் மலாய்க்காரர்- அல்லாத வேட்பாளரைக் களமிறக்கினால், அதற்கும் தயராக இருக்க வேண்டும் அல்லவா”, என்றாரவர்.
“பக்கத்தான் ஹரப்பான் கர்மயின் ஸார்டினி அதன் வேட்பாளர் என்று அறிவித்துவிட்ட நிலையில் பிஎன்னில் அம்னோ வேட்பாளரை நிறுத்துவதா மசீச வேட்பாளரை நிறுத்துவதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லைபோல் தோன்றுகிறது”, என ஸஹாருடின் கூறினார்.
புத்ரா போட்டியில் குதிப்பது உறுதியானால், இப்ராகிம் அலிதான் அதன் வேட்பாளர் என்றும் அவர் குறிப்பிட்டார்.