குறைந்தபட்ச சம்பளம் என்பதற்குப் பதிலாக அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாழ்க்கைச் சம்பளத்தை நிர்ணயம் செய்யும் முறை வர வேண்டும் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) மீண்டும் வலியுறுத்தியது.
ஏற்கனவே 2018-இலும் அது அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்ததைச் நினைவுபடுத்திய பினாங்கு எம்டியுசி செயலாளர் கே.வீரையா, தொழிலாளர்கள் அதிக நேரம் பாடுபடுவதைக் கருத்தில் கொண்டு அப்படி ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறினார்.
தொழிலாளர்கள் மிகைநேர வேலை செய்தல், ஓய்வு நாள்களிலும் பொது விடுமுறை நாள்களிலும் வேலை செய்தல் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
“உயர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க தொழிலாளர்கள் வேறு வருமான மூலங்களையும் தேடிச் செல்கிறார்கள்”, என்று வீரையா கூறினார்.
அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் வாழ்க்கைச் செலவினத்தைச் சரிக்கட்ட போதாது என்பதைப் பொருளாதார பேராசிரியர்கூட ஒப்புக்கொள்கிறார் என்றாரவர்.
சன்வே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இயா கிம் லெங் அக்டோபர் 28-இல் விடுத்த அறிக்கை ஒன்றில் , 2020 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சம்பளம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ரிம1,200 கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒருவருக்கு போதுமானது அல்ல என்று குறிப்பிட்டிருந்ததைதான் வீரையா சுட்டிக்காட்டுகிறார்.
குறைந்தபட்ச சம்பளத்துக்குப் பதிலாக அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத் தேவையான சம்பளம் கொடுக்கப்படுவதே பொருத்தமானதாகும் என்று இயா கூறினார்.