மலேசியாவில் ஆசிரியர் பணிபுரிய சவூதி அராபிய ஆசிரியர்கள் அழைத்துவரப்படுவதாக கூறிய கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ் சாய்-க்கு எதிராக நேற்று ஒரு போலீஸ் புகார் செய்யப்பட்டது. அவரது கூற்று தீய நோக்கம் கொண்டதெனவும் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் மீது எதிர்மறையான தோற்றத்தை உண்டுபண்ணி விட்டதெனவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரைச் செய்தவர் மஸ்லியின் அரசியல் செயலாளர் மஹ்மட் காசிம்.
“சவூதி அராபிய ஆசிரியர்கள் நம்முடைய தேசிய கல்விமுறையைக் கற்றுக்கொள்ள வருகிறார்கள்.
“ஆங்கில மொழியைக் கொண்டு அறிவியல், கணித பாடங்கள் எப்படிக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன கற்கப்படுகின்றன என்பதை அவர்கள் காண்பார்கள்.மலேசியாவில் பாடம் சொல்லிக் கொடுக்க அவர்கள் அழைத்துவரப்படவில்லை”, என்று மஹ்மட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.