ஐந்து-முனை நட்சத்திர மலேசிய கொடி: கூடைப்பந்து சங்கம் மன்னிப்பு கேட்டது

நேற்றிரவு கூடைப்பந்தாட்டப் போட்டியின் தொடக்க விழாவில் தவறான மலேசியக் கொடி காண்பிக்கப்பட்டதற்காக மலேசியக் கூடைப் பந்து சங்கம்(மாபா) மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

டொடக்க விழாவில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது தொலைக்காட்சித் திரையில் மலேசியக் கொடியும் வெஸ்ட்போர்ட் நிறுவனத்தின் சின்னமும் காண்பிக்கப்பட்டன.

மலேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங் 13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்க 14-முனை நட்சத்திரத்தையும் 14 சிவப்பு, வெள்ளைக் கோடுகளையும் கொண்டிருக்கும்.

ஆனால், அங்குக் காண்பிக்கப்பட்ட கொடியில் 5-முனை நட்சத்திரம்தான் இருந்தது.

இத்தவற்றுக்காக மாபா நேற்றிரவு முகநூலில் மன்னிப்பு கேட்டது.

“நேற்றிரவு தற்செயலாக தவறான மலேசியக் கொடி விளையாட்டு அரங்கின் தொலைக்காட்சித் திரையில் காண்பிக்கப்பட்டது. தவற்றுக்கு மன்னிப்பு கேட்கிறோம். நிகழ்ந்த தவற்றுக்கு முழுப் பொறுப்பும் எங்களுடையதே.

“எங்களை மன்னித்து விடுங்கள்”, என்று மாபா பதிவிட்டிருந்தது.

இதனிடையே, இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் ஸ்டீபன் லிம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முகநூலில் பதிவிட்டிருந்த அவர், மாபா தலைவரிடம் விளக்கம் கேட்கப்போவதாகக் கூறினார்.