புகைத்தால் நடவடிக்கை: நெகிரி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

நெகிரி செம்பிலானில் விஸ்மா நெகிரி கட்டிடத்தில் புகைப்பதற்குத் த்டை விதிக்கப்பட்டிருந்தாலும் புகைக்கும் பழக்கம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதை மதிப்பதில்ல்லை எனத் தெரிகிறது.

அக்கட்டிடத்திலும் அதைச் சுற்றியும் வீசி எறியப்பட்டிருக்கும் சிகரெட் துண்டுகளே அதற்குச் சான்று.

இதை இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் சுகாதாரம், சுற்றுப்புறம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்குப் பொறுப்பான குழுத் தலைவர் எஸ்.வீரப்பன் சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு எதிரான என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாப் இயு வெங்( ஹரப்பான் -மம்பாவ்) எழுப்பிய கேள்விக்கு விடையளித்தபோது வீரப்பான் அதைச் சுட்டிக்காட்டினார்.

“சில சட்டமன்ற உறுப்பினர்கள் புகைக்ககூடாது என்ற அறிவிப்புகள் கட்டிடத்தைச் சுற்றிலும் இருந்தாலும் புகைத்துவிட்டு சிகரெட் துண்டுகளைப் படிக்கட்டுகளில் வீசி எறிகிறார்கள். சட்டமன்றக் கூட்டங்களின்போது இது நடக்கிறது. தலைவர்களாகிய நாம் மக்களுக்கு நல்ல முன்மாதிரியாக திகழ வேண்டும்.

“யாங் பெர்ஹொர்மாட் என்ற தகுதியை வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள்”, என்றாரவர்.

தடை செய்யப்பட்ட இடங்களில் புகைத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளானாலும் அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றாரவர்.