நேற்றிரவு போலீஸ் , ஓப் கிளப் ரேட் 2.0 என்ற பெயரில் நாடு முழுக்க மேற்கொண்ட நடவடிக்கையில் 345 பேர் போதைப் பொருள் உட்கொண்டிருந்த குற்றத்துக்காகப் பிடிபட்டனர். அவர்களில் இரு போலீஸ்காரர்களும் அடங்குவர்.
கூட்டரசுத் தலைநகரில் ஒரு கேளிக்கை விடுதியில் தடுத்து வைக்கப்பட்ட அவ்விருவரிடமும் சிறுநீர் சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்ததாக கூட்டரசு நார்கோடிக்ஸ் சிஐடி இயக்குனர் முகம்மட் கலில் காதர் முகம்மட் தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவில் 56 கேளிக்கை மையங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
“15க்கும் 60 வயதுக்குமிடைப்பட்ட மொத்தம் 1753 வாடிக்கையாளர்கள்மீது சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 31 வெளிநாட்டவர் உள்பட 345 பேர் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்து தடுத்து வைக்கப்பட்டனர்”. என்றாரவர்.
மேலும் 78 பேர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காகவும் விற்பனை செய்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டனர்.