கிமானிஸ் இடைத் தேர்தலில் அனிபாவின் மகன்கள் போட்டியிட மாட்டார்கள்

எதிர்வரும் கிமானிஸ் இடைத் தேர்தலில் அத்தொகுதியின் முன்னாள் எம்பி-ஆன அனிபா அமானின் இரு மகன்களின் பெயர்களும் சாபா அம்னோ வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

அனிபாவின் மகன்களான அஹமட் பிர்டுஸுக்கும் அஹமட் ஜாக்ரிக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையாம். அனிபாவின் உதவியாளர் நோர்ஹைடி சே டான் தெரிவித்தார்.

ஜாக்ரி அம்னோவில் ஒரு சாதாரண உறுப்பினர்தான், அவர் ஒரு அரசியல்வாதி அல்ல என்று நோர்ஹைடி கூறியதாக ஃபிரி மலேசியா டுடே அறிவித்துள்ளது. பிர்டுஸ் கிமானிஸ் அம்னோ இளைஞர் தலைவராக இருந்தாலும் தேர்தலில் “போட்டியிடுவதில் அவருக்கு ஆர்வம் இல்லை”யாம்.

சாபா அம்னோ புத்தாண்டில் அதன் வேட்பாளர் பெயரை அறிவிக்குமெனத் தெரிகிறது.

அத்தொகுதி எம்பி பதவியிலிருந்து 2018 டிசம்பரில் வெளியேறிய அனிபா இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை. அத்தொகுதியில் போட்டியிடுவதற்கும் அவர் விரும்பவில்லை.

14வது பொதுத் தேர்தலில் கிமானிஸ் தொகுதியில் 156 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றவர் அனிபா. . குறுகலான வெற்றிதான்.

ஆனால், அவரது வெற்றிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. கிமானிஸ் தொகுதி தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக உச்ச நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பைக் கூட்டரசு நீதிமன்றமும் டிசம்பர் 2இல் நிலைநிறுத்தியது.

அத்தொகுதி அனிபாவிடமிருந்து பறிக்கப்பட்டது. அதற்குத்தான் இப்போது இடைத் தேர்தல்.

இதனிடையே, அனிபாவின் வழக்குரைஞர்கள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படியும் மறுபரிசீலனை செய்யப்படும்வரை இடைத் தேர்தலை நிறுத்தி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.