அரசியார் தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறார்

ராஜா பெர்மைசூரி ஆகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டரியா தாய்மொழியில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்வதோடு மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்வது நல்லதுதான் என்று கூறுகிறார்.

நேற்று அவருடைய டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்ட அரசியார், மக்கள் மெண்டரின் அல்லது தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்துகொள்வதால் “இழக்கப்போவது எதுவுமில்லை” என்றார்.

“நாம் நம்முடைய தாய்மொழியில் பத்திரிகைகளைப் படிப்பது ஒரு பேறு. அதே வேளை மெண்டரின், தமிழ் மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரிந்துகொண்டால் எதையும் இழக்கப் போவதில்லை”, என்றார்.

ஜாவி எழுத்தில்தான் அரசியார் தம் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அம்மொழியில் எழுதக் கற்றுக்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

“என் உடலில் கெண்டனிஸ் இரத்தம் ஓடுகிறது. ஆனால், எனக்கு (கெண்டனிஸ்) எழுதப்படிக்கத் தெரியாது. கெண்டனிஸ் எழுதத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்”, என்றார்.

கடந்த ஆண்டு சின் சியு டெய்லி நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அரசியார் தாம் சீன வம்சாவளியில் வந்தவர் என்பதை உறுதிப்படுத்தினார்.

“நான் சீன வம்சாவளியில் வந்த ராஜா பெர்மைசூரி ஆகோங். நான் கெண்டனிஸ். கெண்டனிஸ், ஹொக்கியன் மொழிகள் கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன்”, என்றார்.