ஆசியான் பல்லுயிர் மாநாடு (ஏசிபி 2020)

கோலாலம்பூர், ஜனவரி 21 – கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் (கே.எல்.சி.சி) மார்ச் 16 முதல் 20 வரை ஆசியான் பல்லுயிர் தொடர்பான மாநாட்டின் (ஏசிபி 2020) / ASEAN Conference on Biodiversity (ACB 2020) சுமார் 500 பங்கேற்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியான் உறுப்பு நாடுகள், மற்றும் தென் அமெரிக்கா, ஆபிரிக்காவைச் சார்ந்த சுமார் 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வர் என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

“ஏசிபி 2020 முதன்மையாக, 2020க்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட முன்னேற்றம் குறித்த விவாதங்களைக் கொண்டிருக்கும் (இதில் குறிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இனங்கள் பற்றிய விவாதம் நடைபெரும்).

“இது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், 2050ஆம் ஆண்டை நோக்கி ஆசியானின் பல்லுயிர் நிர்வாகத்தில் திசையை அமைப்பதற்கும் ஒரு தளத்தை வழங்கும். இது தவிர, உயிரியல் பாதுகாப்பு, நிலையான பயன்பாட்டில் அரசாங்கத்தின் முயற்சிகள், மரபணு வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்ட நன்மைகளின் நியாயமான மற்றும் சமமான பகிர்வு போன்ற விசயங்களுக்கும் இந்த மாநாடு ஒரு ஊக்கியாக இருக்கும்” என்று அவர் தனது தொடக்க உரையில் கூறினார். – பெர்னாமா