இடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்

சென்ற வார இறுதியில் நடைபெற்ற சபாவின் கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட மேலும் ஐந்து இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பனின் தோல்விக்கு அரசாங்கத் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று டி.ஏ.பி. சட்டமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார்.

ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு இல்லாதது மற்றும் அது ஒரு “ஒரு தவணை” அரசாங்கமாக இருக்கக்கூடும் என்ற அவரின் எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்த ராம்கர்பால் சிங், முன்னாள் எதிரிகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறிய பிரதமரின் அறிக்கையும் ஹராப்பனுக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தவிர, அவர் யாருடனும் பணியாற்றத் தயாராக இருக்கிறார் என்பதை பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பது, ஹராப்பான், 14வது பொத்தேர்தலில் தோல்வியுற்று அகற்றப்பட்ட அம்னோ மற்றும் மற்றவர்களுடன் பணியாற்றக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

“61 ஆண்டுகால அதிகாரத்திற்குப் பிறகு பாரிசானை தோற்கடிப்பதன் மூலம் 14வது பொத்தேர்தலில் சாத்தியமற்ற ஒன்றை அடைந்தது ஹராப்பான். ஆனால், பிரதமரின் அன்மைய கூற்று, உண்மையான சீர்திருத்தங்களுக்கான ஹராப்பானின் உறுதிப்பாட்டின் மீதான நம்பிக்கையை நிச்சயமாக தளர்த்திவிடும்” என்று அவர் இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று, மகாதீர் தனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்றும், தேசத்தின் நன்மைக்காக டி.ஏ.பி. மூத்த தலைவர் லிம் கிட் சியாங்குடன் இணைந்து பணியாற்றுவதையும் மேற்கோள் காட்டினார். தனது ஆதரவாளர்கள் பாஸ் (PAS) கட்சியுடன் ஒத்துழைக்க முற்படுவதாகக் கூறிய செய்தி அறிக்கைக்கு பிரதமர் பதிலளித்தார்.

அவரிடம் அந்த கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் சிரித்தாலும், “நான் முன்பு நஜிப்புடன் பணிபுரிந்தேன் என்று உங்களுக்குத் தெரியாதா? ஆனால் என்னால் இப்போது லிம் கிட் சியாங்குடன் இணைந்து பணியாற்ற முடிகிறது” என்றார்.

“நான் கிட் சியாங்கிற்கு எதிராக இல்லை. நல்லதை செய்ய முடிந்தால், நான் அவருடன் இணைந்து செயல்படுவேன். ஆனால் நஜிப், சட்டத்தை மீறியதால் அவரால் எதையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அரசாங்க பணத்தை திருடுவதற்கு அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ராம்கர்பால் ஹராப்பனில் நிகழும் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டபோது, மற்ற பிரச்சினைகளும் அதிகார மாற்றம் போன்ற விசயங்களும் கவனிக்கப்பட வேண்டும் என்றார்.