தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக பொதுவில் சண்டையிட வேண்டாம் – அன்வர் இப்ராகிம்

தலைமைத்துவ மாற்றம் பிரச்சனை தொடர்பாக பக்காத்தான் ஹராப்பன் தலைவர்கள் கருத்து வாக்குவாதம் செய்து வரும் நிலையில், இதுபோன்ற விவாதங்களை அமைதியாக கையாளுமாறு அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும், நாட்டை வழிநடத்தவும் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததாக பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராகிம் சுட்டிக்காட்டினார்.

“ஹராப்பனில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தலைமைத்துவ அதிகார மாற்றத்தை வெளிப்படையாக விவாதிக்க வேண்டாம் என்றும், 2018 ஜனவரியில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒருமித்த கருத்தை மதிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் அன்வர் இப்ராகிம்.

“ஹராப்பானும் மகாதீரும் தலைமைத்துவ மாற்றத்தில் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒப்புக்கொண்டபடி தலைமைத்துவ மாற்றம் நடைபெரும் என தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த முடிவை நாம் மதிக்க வேண்டும். இதனால் மாற்றம் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெறும்,” என்று அவர் இன்று பிற்பகல் ஒர் அறிக்கையில் கூறினார்.