சர்ச்சைக்குரிய பி.எஸ்.எஸ் அமலாக்கத்திட்டம் ரத்து

ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்தவிருந்த சர்ச்சைக்குரிய சபா தற்காலிக பாஸை (பிஎஸ்எஸ்) [Sabah Temporary Pass (PSS)] செயல்படுத்தும் முடிவு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

போர்னியோ போஸ்டில் ஒரு அறிக்கையின்படி, சபா முதலமைச்சர் ஷாஃபி அப்டால், பி.எஸ்.எஸ்ஸை ரத்து செய்வதற்கான முடிவு இன்று சபா அரசாங்க அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றார்.

“மக்களின் கருத்தைக் கேட்டு பிஎஸ்எஸ் ரத்து செய்யப்படும் என்று இன்று அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது” என்று ஷாஃபி கூறினார்.

சமீபத்தில் நடந்த கிமானிஸ் இடைத்தேர்தலில் ஷாஃபியின் வாரிசான் சபா கட்சி தோல்விக்கு ஒரு முக்கிய காரணியாக PSS சர்ச்சை பேசப்பட்டது.

வெற்றி பெற்ற பாரிசான் / அம்னோ, பி.எஸ்.எஸ் வெளிநாட்டு குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமையை வழங்குவதை சாத்தியப்படுத்தும் எனவும் அது மாநிலத்தின் மக்கள்தொகையை மாற்றுவதற்கும் சாத்தியமானது என்று பிரச்சாரம் செய்தது.

சபாவில் நீண்டகால வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு தற்போது மூன்று வகையான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை IMM13, Kad Burong-Burong dan Sijil Banci ஆகியவையாகும். PSS எனப்படும் புதிய ஆவணம் 2020 ஜூன் 1 முதல் அம்மாநிலத்தில் தற்போதுள்ள மூன்று ஆவணங்களை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.