மறுமலர்ச்சி பெறுகிறது உத்துசன்

தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் (NUJ) உத்துசன் மறுமலர்ச்சியை உறுதிப்படுத்துகிறது, வேலைவாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

நாட்டின் மிகப் பழமையான மலாய் மொழி செய்தித்தாளான உத்துசன் மலேசியா, நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த ஆண்டு மூடப்பட்டது. ஆனால், இன்னும் சில மாதங்களில் அது மறுமலர்ச்சி பெற்று புதுப்பிக்கப்பட உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு உத்துசன் ஆன்லைன் பேஸ்புக் பக்கத்தில் பத்திரிக்கை ஆசிரியர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் என வேலை வாய்ப்புகளை அறிவித்திருந்தது, இதற்கு சான்றாக அமைகிறது.

NUJ-Utusan கிளைச் செயலாளர் முஹம்மது பஷீர் அபு பக்கார், உத்துசன் மலேசியா தனது செயல்பாட்டை மே மாத ஆரம்பத்தில் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், முன்னாள் ஊழியர்கள் மீண்டும் திரும்புவதற்கான அறிவுறுத்தல்கள் எதுவும் இதுவரை இல்லை.

“காலியிடங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். முன்னாள் ஊழியர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி எதுவும் இல்லை. என்னைப் பொருத்தவரை, அவர்கள் மற்ற வேட்பாளர்களைப் போலவே நேர்காணல்வழி தேர்ந்தெடுக்கப்படுவர்,” என்று பஷீர் கூறினார்.

பங்சாரில் உள்ள நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் (என்எஸ்டிபி) தலைமையகத்தில் இருக்கும் புதிய அலுவலகத்தில் இது செயல்படும் என்றும், பல முன்னாள் ஊழியர்கள் உத்துசன் மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற மீண்டும் விண்ணப்பித்துள்ளனர் என்றும் பஷீர் கூறினார்.

40 நிருபர்கள், 12 புகைப்படக்காரர்கள் மற்றும் 12 கிராஃபிக் கலைஞர்களுக்கான பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

1967 ஆம் ஆண்டில் ரோமானிய மலாய் மொழிக்கு மாறுவதற்கு முன்பு உத்துசன் முதன் முதலில் 1939இல் ஜாவியில் வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியில் உத்துசன் குழுமம் 815 ஊழியர்களைக் கொண்டிருந்தது. 2012 முதல் நஷ்டத்தில் இயங்கி வந்து கடந்த ஆண்டு அக்டோபரில், அதன் அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.