இனரீதியான பதட்டங்களை ஏற்படுத்தும் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பரப்பப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து போலி செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதால் அவர் இதை கூறினார்.
“மலேசியர்களை பயமுறுத்துவதற்கும், இன வெறுப்பைத் தூண்டுவதற்கும் வேண்டுமென்றே போலி செய்திகளை வெளியிடுவோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்று மகாதீர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்த்து, பத்திரிகைகளையும் அவர் எச்சரித்தார்.
“பத்திரிகை சுதந்திரம் இந்த நாட்டில் பேணப்படுகிறது. ஆனால் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொருட்டு போலி செய்திகளை பரப்புவது அல்லது பொய் சொல்வது பொறுத்துக்கொள்ளப்படாது. அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் குறித்து போலி செய்திகள் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மேலும் நான்கு பேரைத் தேடுவதாகவும் அதிகாரிகள் இன்று முன்னதாக அறிவித்தனர்.
இதனிடையே, முஸ்லிம் அல்லாத சுற்றுலாப் பயணிகளை மசூதிகளில் நுழைவதை தடுப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் மகாதீர் கூறினார்.
“மசூதிகள் அல்லது அருங்காட்சியகங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முடியாது என்று அரசாங்கம் அறிவிக்கவில்லை… ஆனால் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை பொருத்தவரை, அவர்களுக்கு இந்த நோய் (கொரோனா வைரஸ்) இருக்கலாம், அதை இந்த இடங்களுக்குக் கொண்டு வரலாம். இது அரசாங்கத்தின் கொள்கை அல்ல, இது பொறுப்பற்ற செயல்” என்று அவர் கூறினார்.
நேற்று, புத்ராஜெயாவின் புத்ரா மசூதி, (மேலே) முஸ்லிம் அல்லாத பார்வையாளர்கள் அதன் பிரதான வாயிலுக்கு அப்பால் நுழைவதை கட்டுப்படுத்தும், என்று தெரிவித்தது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கொரோனா வைரஸ் பரவல் குறித்த கவலையைத் தொடர்ந்து, முஸ்லிம் அல்லாத பார்வையாளர்கள் மசூதிக்கு நுழைவதை மறுப்பதாக மசூதியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
நுழைவுத் தடை இன்னும் தீர்மானிக்கப்படாத தேதி வரை அமலில் இருக்கும், இப்போதைக்கு, முஸ்லிம் பார்வையாளர்கள் மட்டுமே பிரார்த்தனைக்கு அனுமதிக்கப்படுவார்கள், என்று ஒரு மசூதி அதிகாரி கூறியுள்ளார்.