முஸ்லீம் அல்லாத பார்வையாளர்களுக்கு புத்ரா மசூதி மீண்டும் திறக்கப்பட்டது

கொரோனா வைரஸ் (2019-nCoV) பரவல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஜனவரி 26 முதல் மூடப்பட்ட புத்ராஜெயாவில் உள்ள புத்ரா மசூதி, இன்று முஸ்லிம் அல்லாத சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

சுற்றுலா வருகையாளர்களின் வருகையின் போது, சுகாதார அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றும் என்றும் மசூதி நிர்வாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“ஆம், இன்று நாங்கள் புத்ராஜயா மசூதியை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட மீண்டும் திறந்து வைத்துள்ளோம். விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் வைரஸைக் கண்டுபிடிப்பதற்கான கருவிகள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் முன்பு சுகாதாரப் பாதுகாப்புக் கருதி, மசூதியை சுற்றுலாப் பயணிகளுக்கு மூடிவிட்டோம். இருப்பினும், இந்த விஷயத்தில் சுகாதார அமைச்சு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனவே நாங்கள் மீண்டும் மசூதியை திறந்துள்ளோம்” என்று மலேசியாகினி இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

ஜனவரி 26 ம் தேதி, புத்ரா மசூதி முஸ்லீம் பார்வையாளர்களுக்கு பிரார்த்தனை செய்ய மட்டுமே திறந்திருக்கும் என்றும், முஸ்லிம் அல்லாத பார்வையாளர்களுக்கு மூடப்படும் என்றும் பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் மொஹமதீன் கெட்டாபி, இது குறித்து கருத்து கேட்கும்போது, அத்தகைய தடையை நிறுத்த சம்மந்தப்பட்ட தரப்பிற்கு கடிதம் எழுதுவதாக கூறினார்.

இன்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், முஸ்லிம் அல்லாத சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு மசூதி அல்லது அருங்காட்சியகத்தை மூடுவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அது பொறுப்பற்றது என்றும் விவரித்தார்.

இது குறித்து புத்ரா மசூதியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த மசூதி உண்மையில் மலேசியாவின் சுற்றுலா தலமாகும். தினமும் சீனா உட்பட பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவகை புரிகின்றனர்”, என்றார்.