யு.இ.சி (UEC) அங்கீகரிக்கப்படாவிட்டால், டி.ஏ.பி. (DAP) ஹராப்பான் அரசாங்கத்திலிருந்து விலகும்

ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழை (யுஇசி)/Unified Examination Certificate (UEC) அங்கீகரிக்க மறுத்தால், டிஏபி, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திலிருந்து விலகும் என்று டிஏபி துணை பொதுச்செயலாளர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

“யுஇசி அங்கீகரிக்கப்படாவிட்டால் டிஏபி அரசாங்கத்திடமிருந்து விலகும் என்று நாங்கள் ஒருமித்த கருத்தை அடைந்துள்ளோம். நாங்கள் இனி ஆளும் அரசாங்கத்தின் பகுதியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்த கொள்கையை தான் நாங்கள் நிலைநிறுத்துவோம்,” என்று ஙா (மேலே) ஓரியண்டல் டெய்லிக்கு தெரிவித்தார். நேர்காணல் காட்சிகளின் ஒரு பகுதி இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

2018 ஹராப்பானின் பொதுத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, யு.இ.சி.யை அரசாங்கம் அங்கீகரிப்பதில் தாமதமாக இருப்பதற்காக ஹராப்பான், குறிப்பாக டிஏபி, சீன சமூகம் மற்றும் சீன அடிப்படையிலான கட்சிகளால் அவதூறாகப் பேசப்பட்டது.
யு.இ.சி அங்கீகாரம் உட்பட, பல விஷயங்களில் அமைதியாக இருப்பதற்காக டிஏபி விமர்சிக்கப்பட்டது.

“டிஏபி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறியபின் அமைதியாக இல்லை. உண்மையில், நாங்கள் பேசுவதற்கு தைரியமாக இருக்கிறோம், இப்போது எங்களிடம் அரசாங்க சேனல் உள்ளது, இதை அமைச்சரவைக் கூட்டங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்” என்று ஙா மறுத்தார்.

டிஏபி மற்றும் அதன் ஹராப்பான் கூட்டணிகளின் சாதனைகள் பொதுமக்களால் அங்கீகரிக்கப்படாமைக்கும் பாராட்டப்படாமைக்கும் அவர் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

“நாங்கள் எங்கள் பணிகளில் 70 சதவிகிதத்தை சாதித்துள்ளோம், ஆனால் மக்கள் முழுமையடையாத 30 சதவிகிதத்தை மட்டுமே பார்க்கிறார்கள். 70 சதவிகிதம் முடிக்கப்பட்ட வேலைகள் அங்கீகாரத்தைப் பெறவில்லை,” என்று அவர் கூறினார்.

ஆளும் கட்சிகள் தங்கள் சாதனைகளை ஒருபோதும் திறம்பட விளம்பரப்படுத்த தவறிவிட்டது எனவும் அவர் கூறினார்.

சீன தொடக்கப் பள்ளிகள் மற்றும் சீன சுயாதீன (independent) உயர்நிலைப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை நிறுவனமயமாக்கியதற்காக ஹராப்பானுக்கு ஒரு பாராட்டும் கிடைக்கவில்லை என்றார்.

“கடந்த 60 ஆண்டுகளில் (பி.என்) ஆட்சியின் போது இல்லாத விஷயங்களையும், இப்போது நம்மிடம் உள்ளவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எங்களை அங்கீகரித்து புகழ்ந்து பேச ஏதுமில்லையா?” என்று ஙா கேட்டார்.

“சீன சமூகம் எங்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கின்றோம். நீங்கள் இது போதும் என்று நிறைவுடன் இருக்கக்கூடாது. டிஏபி மூழ்கினால், மத மற்றும் இன தீவிரவாதத்தை கடைபிடிக்கும் பாஸ் மற்றும் அம்னோ ஆகிய கட்சிகள் மீண்டும் திரும்பும். இரண்டு தீவிரவாதங்களும் ஒன்றிணைந்தால், மலேசியா நாடு அழிந்துபோகும். அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றின் கூட்டணி நாட்டிற்கு பேரழிவு தரும்” என்று அவர் கூறினார்.

இரு எதிர்க்கட்சிகளும் இனவாத உணர்வை வளர்ப்பதில் தீவிரமாக இருக்கும் என்று ஙா சீன சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
எஸ்.எம்.கே. பந்தர் புச்சோங் 1-ல்/ SMK Pusat Bandar Puchong 1, சீனப் புத்தாண்டு அலங்காரத்தைப் பற்றிய சர்ச்சையை மேற்கோள் காட்டி, சீனர்கள் இனி எதிர்காலத்தில் விளக்குகளை தொங்கவிட முடியாமலும் அங் பாவ் வழங்க முடியாமலும் போய்விடும் என்று அவர் கூறினார்.

சீன சமூகம் ஹராப்பான் அரசாங்கத்துடன் இருப்பது அவசியம். பன்மைத்துவம் மற்றும் மிதமான கொள்கையுடன் இருப்பது அவசியம். இல்லையென்றால், மலேசியா இனி மலேசியாவாக இருக்காது. டிஏபி போனால் எம்சிஏ திரும்பும் என்பதை நீங்கள் நம்பியிருக்ககூடாது, ஏனெனில் பாஸ் அல்லது அம்னோ ஆகியவைதான் திரும்பும், என்றார் ஙா.