கொரோனா வைரஸ் : ஹூபேயில் இறப்பு எண்ணிக்கை 162-ஐ எட்டியது

கொரோனா வைரஸ் பரவலின் மையப்பகுதியான சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 160-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

புதிய கொரோனா வைரஸிலிருந்து மாகாணத்தில் இறப்புக்கள் 37 உயர்ந்து, இப்போது 162 ஆகியுள்ளதாகவும், மேலும் 1,032 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஹூபேயின் சுகாதார ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வழக்குகள் ஹூபேயில் இருந்தபோதிலும், சீனாவின் பிற இடங்களிலும், மற்றும் குறைந்தது 15 நாடுகளிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஹூபே மாகாணத்திற்கு வெளியே உள்ள இறப்புகள் உட்பட, இறப்பு எண்ணிக்கை மொத்தம் 170-ஆக உள்ளது. இவை அனைத்தும் சீனாவில் உள்ளன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழு, வியாழக்கிழமையன்று ஜெனீவாவில், சந்திப்புக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில், அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய நிலையில் ஆபத்தாக இருக்கிறதா என்பதை தீர்மானிக்க உள்ளது.

“கடந்த சில நாட்களில், வைரஸின் தொற்று, குறிப்பாக சில நாடுகளில், குறிப்பாக மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவுவது நம்மை கவலையடையச் செய்கிறது” என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார். அவர் ஜெர்மனி, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாட்டை மேற்கோள் காட்டி பெயரிட்டார்.

“சீனாவுக்கு வெளியே உள்ள எண்ணிக்கைகள் இன்னும் சிறியதாக இருந்தாலும் கூட, அவை மிகப் பெரிய பரவலுக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன.”

பெரும்பாலான பதிப்புகள் குவிந்துள்ள ஹூபேயின் தலைநகரான வுஹானில் இருந்து சுமார் 200 அமெரிக்கர்களை அமெரிக்கா மீட்கொண்டுள்ளது. கலிபோர்னியா வந்ததும் அவர்கள் பிரத்யேக பரிசோதணைக்கு அனுப்பப்படுவார்கள். பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளும் தங்களின் மக்களின் வெளியேற்றங்களை ஏற்பாடு செய்துள்ளன.

பொருளாதாரத்தில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவிற்கு கொரோனா வைரஸின் பரவல் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பாகவே உள்ளது. நிறுவனங்கள் தங்களின் பயணங்களை குறைக்கின்றன. சுற்றுலாப் பயணிகளும் தங்களின் பயணங்களை ரத்து செய்கின்றனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா, ஏர் கனடா மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களும் சீனா செல்லும் விமானங்களை குறைத்து வருகின்றன.

  • ராய்ட்டர்ஸ்