கொடூரமான சட்டங்களை ரத்து செய்ய ஹராப்பான் தயாரா? – பி ராமசாமி

நேற்று, கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றம் கடேக் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மலாக்கா மாநில நிர்வாக கவுன்சிலர் ஜி சாமிநாதனின் ஜாமீனை மறுத்தது.

சாமிநாதனுக்கு ஜாமீன் மறுக்க மேற்கோளாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிபிசி)/ Criminal Procedure Code (CPC), பிரிவு 388-ஐக் குறிப்பிட நீதித்துறை ஆணையர் அஹ்மட் ஷாஹிர் முகமட் சால்லே முடிவு செய்தார்.

சிபிசி-யில் அதிகபட்ச மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக்கு சாமிநாதனின் குற்றங்கள் கட்டுப்பட்டிருப்பதால், ஜாமீனை நிராகரிக்க அவர் சட்டப்படி கட்டுப்பட்டுள்ளார் என்று அஹ்மட் ஷாஹிர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.டி.டி.இ) ஒரு பயங்கரவாத அமைப்பு என உள்துறை அமைச்சால் அரசிதழில் பட்டியலிடப்பட்டு வர்த்தமானி செய்யபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாமிநாதன் செய்த குற்றங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட அமைச்சரின் அரசிதழின் செல்லுபடியை கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை என்று அஹ்மட் ஷாஹிர் கூறினார்.

முந்தைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நீதிபதி முகமட் நஸ்லான் மொஹமட் கசாலி (கீழே), ஜாமீன் வழங்குவது நீதிமன்றங்களின் அதிகார எல்லைக்குள் இருப்பதாகவும், சாமிநாதன் விடுவிக்கப்படலாம் என்றும் சொல்லியிருந்தார். ஆனால், நேற்றைய தீர்ப்பில் அவர் சொன்னது சாத்தியப்படாமல் போனது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இருப்பினும், சாமிநாதனின் வழக்கில், அஹ்மட் ஷாஹிர் முந்தைய உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றவில்லை; பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) குறித்து எந்தக் குறிப்பையும் அவர் பின்பற்றவில்லை. ஜாமீன் மறுக்கும் தீர்ப்பில் ‘சோஸ்மா’ என்ற சொல்லே குறிப்பிடப்படவில்லை.

அவரது மேற்கோள், கவனம் குற்றவியல் நடைமுறைக் கோட் (சிபிசி)/ Criminal Procedure Code (CPC), மீது மட்டுமே இருந்தது. சிபிசியின் பிரிவு 388-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளிக்கிறது.

எனவே, சாமிநாதனின் குற்றங்கள் உள்துறை அமைச்சரால் பயங்கரவாத அமைப்பாக வர்த்தமானி செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.டி.டி.இ) உடனான தொடர்புடையதால், சிபிசியின் கீழ், ஜாமீன் இல்லை, என்று குறிப்பிட்டார்.

எல்.டி.டி.இ மற்ற நாடுகளில் செயலிழந்த அமைப்பாக இருக்கலாம் என்ற உண்மையை நீதித்துறை ஆணையர் அஹ்மத் ஷாஹிர் குறிப்பிட்டிருந்தாலும், அரசிதழில் அது ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டது என்பது ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதுவதற்கு அவருக்கு போதுமானதாக இருந்தது என்றார்.

ஒரு அமைப்பை வர்த்தமானி செய்யப்பட வேண்டுமா அல்லது வர்த்தமானியிலிருந்து அகற்ற வேண்டுமா என்பது கொள்கை தயாரிப்பாளர்களின் வேலை என்றும் அது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் அவர் கூறினார்.

ஜாமீனை மறுப்பதில் அஹ்மட் ஷாஹிர் தனது தீர்ப்புக்கு வர இரண்டு தொடர்புடைய விஷயங்களைக் குறிப்பிட்டார்.

முதலாவதாக, சிபிசி/CPC, பயங்கரவாத குற்றங்களுக்கு, மரணம் அல்லது ஆயுள் தண்டனை போன்ற கடிமையான தண்டனைகளை விதித்ததால், இவை ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் என்று அவர் கூறினார்.

இரண்டாவதாக, சாமிநாதன் செய்த குற்றங்கள் அரசிதழில் ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட எல்.டி.டி.இ இயக்கத்துடன் தொடர்புடையதால், ஜாமீனை மறுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

இதில், கொலை குற்றச்சாட்டுக்கள் உட்பட, தண்டனைச் சட்டத்தின்/Penal Code கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜாமீன் அனுமதித்து, அளிக்கப்பட்டுள்ளன என்பது விந்தையாக உள்ளது. ஆனால் நீண்டகாலமாகவே செயலிழந்த அமைப்பாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்புடைய பொருள்களை வத்திருந்ததாக நம்பப்படும் சாமிநாதன் ஒரு கொலைகாரனை விட மோசமாக நடத்தப்படுகிறார்.

இது நீதிமன்ற தீர்ப்பைப் பற்றியோ அல்லது சோஸ்மாவைப் பற்றியோ அல்ல. ஆனால் தேர்தல் அறிக்கையின்படி அகற்றப்பட்டிருக்க வேண்டிய கொடுரமான சட்டங்களை சகித்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்பதையே காட்டுகிறது.

பி ராமசாமி, பிராய் சட்டமன்ற உறுப்பினர். பினாங்கு மாநிலத்தின் இரண்டாம் துணை அமைச்சராகவும் உள்ளார். இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் படைப்பாளர் / பங்களிப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே. அவை மலேசியாகினியின் கருத்துக்களைக் குறிக்கவில்லை.