‘எல்லோரையும் திருப்தி படுத்த, ஐஸ்கிரீமை தான் விற்க வேண்டும்.’

‘எல்லோரையும் திருப்தி படுத்த, ஐஸ்கிரீமை தான் விற்க வேண்டும்.’

அனைவரையும் திருப்திப்படுத்த விரும்பினால் ஒரு அரசியல்வாதி ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழிலில் தான் இறங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் இன்று தெரிவித்தார்.

போதைப்பொருள் கொள்கை குறித்த பேசிய சுல்கிப்ளி, நாட்டில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது கடினம் என்பதை ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

இந்த திட்டம் போதைப்பொருளை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர் அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு முறையான சிகிச்சை பெற உதவுவதற்காக அவ்வாறு செய்கிறார் என்றும் தெரிவித்தார்.

“இந்த நாட்டில், அரசியல்வாதிகள், அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. அனைவரையும் திருப்திப்படுத்த ஒரே வழி ஐஸ்கிரீம் விற்பது தான். ஆனால் அதிலும் கூட நீங்கள் பல விமர்சனங்களை பெறுவீர்கள்.

“போதைப்பொருள் பிரச்சினை மலேசியாவில் சமூகத்தின் அனைவரையும் பாதிக்கும் ஒரு உண்மையான பிரச்சினையாகும். எல்லோரும் தன் வாழ்நாளில், போதைப் பழக்கத்தில் போராடும் ஒருவரை நிச்சயமாக அறிந்திருப்போம்.”

“அரசாங்கத்தின் கடமை, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மட்டுமல்ல. அரசாங்கம், பயனுள்ள போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். போதைப்பழக்க சிகிச்சையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்று அவர் கூறினார்.

“எங்கள் கொள்கைகள் வெறும் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் இல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கின்றன. அரசியலை விட மக்களை முன்னுரிமை படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். போதைப்பொருள் பிரச்சினை, இனம், மதம் அல்லது அரசியல் கட்சியை சார்ந்து ஏற்படுவதில்லை. மக்கள் எங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“பிரச்சினையை குழப்ப வேண்டாம். இங்கே நாங்கள் போதைப்பொருட்களின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயலவில்லை. சீர்திருத்தத்திற்கு ஒரு சிறிய நடவடிக்கையாகவும், போதைப்பொருள் பித்து, ஒரு நோய் என்பதையும் இறுதியில் புரிந்துகொள்ள முயல்கிறோம். போதைப்பித்தர்கள், நோயாளிகள் என்பதால் அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களை சிறையில் அடைத்து அச்சுறுத்த வேண்டாம், அவர்களுக்கு உதவுங்கள்” என்று அவர் கூறினார்.

புதிய கொள்கை நடைமுறைப்படுத்த ஒரு குறிப்பிட்ட காலக்கெடு இருக்கிறதா என்று கேட்டதற்கு, இது பாக்காத்தான் நிர்வாகத்தின் முதல் காலப்பகுதியில் செயல்படுத்தப்படும், என்றார்.

போதைப்பொருட்களை வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான குற்றவியல் அபராதங்களை, தண்டனைகளை ரத்து செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுல்கிப்ளி அறிவித்தார்.