காணாமல் போன மகள் தொடர்பாக ஐ.ஜி.பி.க்கு எதிராக இந்திரா காந்தி ரி.ம.100 மில்லியன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளார்
காணாமல் போன தனது மகள் பிரசனா திக்ஸாவைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக எம்.இந்திரா காந்தி ஐ.ஜி.பி அப்துல் ஹமீட் படோர் மீது ரி.ம.100 மில்லியன் வழக்கு தொடரவுள்ளார்.
இதற்கிடையில், எம். இந்திரா காந்தியைப் பிரதிநிதிக்கும் சட்ட நிறுவனம், காணாமற்போன தங்கள் கட்சிக்காரரின் மகளைத் தேடுவது குறித்து ஐ.ஜி.பி. அப்துல் ஹமீட் படோரின் கருத்தை நிராகரித்துள்ளது.
ஹமீட் ஒரு “மகிழ்ச்சியான முடிவை” நோக்கி செயல்படுவதாகக் கூறியதைக் குறிப்பிட்டு, ராஜ் & சாச், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கருத்தில் கொண்டு இது தேவையில்லை என்று வாதிட்டது.
இந்திராவின் முன்னாள் கணவர், கே.பத்மநாதனை (முஹம்மது ரிதுவான் அப்துல்லா) கைது செய்து பிரசன்னா திக்ஸாவை இந்திராவுக்கு திருப்பிக் கொடுக்க ஐ.ஜி.பி மற்றும் காவல்துறையினருக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு இருக்கும் போது, ஐ.ஜி.பி குறிப்பிடும் “மகிழ்ச்சியான முடிவு” சூழ்நிலைக்கு முற்றிலும் அவசியமில்லை, என்று ராஜ் & சாச் கூறியுள்ளது.
“இரு தரப்பினருக்கும் வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்க முயல்கிறேன்” என்ற ஐ.ஜி.பியின் கருத்து தேவையற்றது. ஐ.ஜி.பி எந்தக் கட்சியையும் மகிழ்விக்கத் தேவையில்லை. நீங்கள் ஒரு பதிலையும் தர தேவையில்லை, அதற்கான காரணத்தையும் நீங்கள் கூற வேண்டிய அவசியமில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்” என்று அந்த நிறுவனம் இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில் கூறியது.
பத்மநாதன் 2009 ஆம் ஆண்டில், 11 மாத வயதில் பிரசனாவை அபகரித்துக் கொண்டார். அவர் இஸ்லாமிற்கு மாறிய சிறிது காலத்திலேயே, முஹம்மது ரிதுவான் அப்துல்லா என்று பெயரை ஏற்றுக்கொண்டார்.
இந்திராவின் முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்க உச்ச நீதிமன்றம் பின்னர் காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், அவர் இருக்கும் இடம் இன்னும் அறியப்படவில்லை. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறப்பு பணிக்குழுவை ஒன்றை அமைத்தனர்.
‘தந்தை மற்றும் மகள் எங்கே என்று ஐ.ஜி.பி.க்கு தெரியுமா?’
இதற்கிடையில், ஹமீட்டின் கருத்துக்கள் பிரசானா மற்றும் அவரது தந்தை இருக்கும் இடம் குறித்து ஐ.ஜி.பி.க்கு தெரியுமா என்ற கேள்விக்கு வழிவகுக்கிறது என்று ராஜ் & சாச் கூறினர்.
“இது மில்லியன் கணக்கான மலேசியர்களின் மனதில் கேள்வியைக் எழுப்புகிறது – பத்மநாதன் (முஹம்மது ரிதுவான்) எங்கே என்று ஐ.ஜி.பி.க்கு உண்மையில் தெரியுமா? பிரசானா எங்கே என்று ஐ.ஜி.பி.க்கு தெரியுமா?
“ஐ.ஜி.பி.-யின் “இரு தரப்பினருக்கும் வெற்றி” என்ற கூற்றிற்கு அர்த்தம் என்ன? இந்த கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் இல்லை,”என்று அது மேலும் கூறியது.
செவ்வாயன்று, ஹமீட் செய்தியாளர்களிடம், இந்த விஷயத்தில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டதாகவும், வழக்கை மேலும் இழுக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
தனது மகளை கண்டுபிடிப்பதில் தோல்வியுற்றதாகக் கூறி இந்திரா தன் மீது RM100 மில்லியனுக்காக வழக்குத் தொடரும் முடிவு குறித்து ஹமீட் கருத்து தெரிவிக்கையில், “இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதில் எங்கள் தரப்பு செயல்படுகிறது. இந்த வழக்கை இழுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று நான் உறுதியளித்துள்ளேன். எனவே அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். இதனால் தந்தை மற்றும் தாய் இருவருக்கும் ஒரு ‘மகிழ்ச்சியான முடிவு’ வரும்,” என்று அவர் மேலும் கூறினார்.