வுஹானில் இருந்து 132 மலேசியர்கள் நாளை மீட்பு

சீனாவின் வுஹானில் இருக்கும் 108 மலேசியர்களையும் 24 குடிமக்கள் அல்லாதவர்களையும் நாளை நாட்டிற்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

304 உயிர்களைக் கொன்ற வுஹான் கொரோனா வைரஸ் (2019-nCoV) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் வுஹான் மற்றும் சீனாவின் பல நகரங்கள் கட்டுப்பாட்டு நிலையில் உள்ளன. இன்றுவரை, உலகளவில் 14,380 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சீனாவில் பதிவாகியுள்ளன.

“விமானப் பணியாளர்கள் உட்பட இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் நான் சந்தித்தேன். வுஹானில் இருந்து மலேசியர்கள் திரும்பி வருவதற்கு அவர்கள் செய்த தியாகத்திற்காக, அவர்களுக்கும் குறிப்பாக அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்தின் சார்பாகவும் மலேசியர்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று துணை பிரதமர் வான் அஜிசா வான் இஸ்மாயில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, வுஹான், தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளை 12 பணியாளர்களுடன் ஏர் ஏசியா விமானத்தில் இந்த 132 பேரையும் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள்.

அவர்கள் வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்தில் சீன அரசாங்கத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வான் அஜிசா கூறினார்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு (கே.எல்.ஐ.ஏ) வந்ததும், அவர்கள் அனைவரும் மீண்டும் மற்றொரு பரிசோதனைக்கு உட்படுவார்கள் என்றும், அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவார்கள் என்றும் வான் அஜிசா கூறினார்.

ஆரோக்கியமாக இருப்பவர்கள் 14 நாட்களுக்கு கண்காணிப்புக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று வான் அஜிசா கூறினார்.