“ஐ.ஜி.பியின் கருத்துக்கள் அச்சத்தை எழுப்புகின்றன” – எம்.சி.ஏ மகளிர் பிரிவு

எம்.சி.ஏ மகளிர் பிரிவு/வனிதா எம்.சி.ஏ: ஐ.ஜி.பியின் கருத்துக்கள் அச்சத்தை எழுப்புகின்றன, இந்திராவின் முன்னாள் கணவர் மலேசியாவை விட்டு எப்படி வெளியேறினார்?

எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் மற்றும் அவர்களது மகள் இருக்கும் இடம் குறித்து ஐ.ஜி.பி. அப்துல் ஹமீட் படோர் கூறிய கருத்துக்கள் அதிருப்தி தருவதாக வனிதா எம்.சி.ஏ தலைவர் ஹெங் சீ கீ தெரிவித்துள்ளார். முஹம்மது ரிதுவான் அப்துல்லா மலேசியாவில் இல்லை என்ற கருத்தை ஐ.ஜி.பி. தெரிவித்ததால் தான் அவர் இதைச் சொன்னார்.

கடந்த வாரம், ரிதுவானை தலைமறைவிலிருந்து வெளியே வருமாறு ஹமீட் வலியுறுத்தினார்.

“மறைந்திருந்தது போதும். வெளியே வாருங்கள், இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்வோம், இதனால் நீங்கள் நாட்டிலேயே தங்கலாம், உங்கள் பிள்ளைகளுக்கு முறையான கல்வியும் கிடைக்கும்,” என்று அவர் கூறியிருந்தார்.

இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறிய ஹெங், மலேசியாவை விட்டு சட்டப்பூர்வமாக வெளியேற தனக்கும் தனது மகளுக்கும் பாஸ்போர்ட்டை ரிடுவான் எவ்வாறு பெற முடிந்தது என்று கேள்வி எழுப்பினார்.

“குடியேற்றத் துறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது, இது பாஸ்போர்ட்களை வழங்குகிறது. உள்துறை அமைச்சு காவல்துறை மீதான அதிகாரத்தையும் கொண்டுள்ளது.

“ஆகவே, தப்பி ஓடக்கூடிய எந்தவொரு நபருக்கும், காவல்துறையினர் குடியேற்றத் துறை கவுண்டர்கள் மற்றும் கடல் துறைமுகங்கள், விமான நிலையங்கள், எல்லை ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களுக்கும் மற்றும் நிலக் கடப்புகளில் நிறுத்தப்பட்டுள்ள காவல்துறையினருக்கும் கூட நோட்டீஸ் அனுப்புவார்கள்.

“உள்துறை அமைச்சு, காவல்துறை அல்லது குடிவரவு அதிகாரிகள், ரிடுவானை தடுத்து வைக்கவும் பிரசன்னாவை தனது தாயிடம் திருப்பித் தரவும் எல்லைகளில் கடமையில் உள்ள குடிவரவு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு உச்ச நீதிமன்ற உத்தவு குறித்து சுற்றறிக்கை வெளியிட்டார்களா?”

கே. பத்மநாதன் என்று அழைக்கப்பட்ட ரிடுவான், 2009 ஆம் ஆண்டு, அவர் இஸ்லாமிற்கு மாறிய சிறிது காலத்திலேயே, 11 மாத குழந்தையாக இருந்த பிரசன்னாவை அழைத்துச் சென்றார்.

உச்ச நீதிமன்றம் பின்னர் ரிதுவானை தடுத்து வைத்து குழந்தையை தனது தாயிடம் திருப்பி அனுப்புமாறு ஐ.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில், எல்லையில் உள்ள குடிவரவு அதிகாரிகள் பாராபட்சமாக இருக்கிறார்களா என்றும், ரிடுவானையும் அவரது மகளையும் பதிவு செய்யாமலேயே நாட்டிற்கு வெளியே நழுவ விட்டார்களா, என்றும் ஹெங் கேட்டார்.

கிளந்தானில் உள்ள கோலோக் ஆற்றின் அருகே ரிடுவான் காணப்பட்டதாகக் கூறும் செய்தி அறிக்கைகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.

ஐ.ஜி.பியை செயல்பட வலியுறுத்திய, ஹெங்: “அவர் (ரிடுவான்) நீதித்துறை, காவல்துறை மற்றும் அவரது குடும்பத்திருக்கும் கம்பி நீட்டிவிட்டார். தனது சந்ததியினர் மற்றும் குடும்ப நலனுக்கு எதிராக செயல்பட்ட போதிலும் அவர்மீது ஏன் இந்த மென்மையான அணுகுமுறை தொடர்கிறது?”

இது, “‘உங்களால் என்னை பிடிக்க முடியாது” என்ற எண்ணம், சட்டத்தை மீறும் போக்கு, சுயநலவாதத் தன்மை, முன்னாள் மனைவியை பழிவாங்கும் எண்ணம் போன்றவை முன்னோடியாக திகழ வழிவகுக்கும். மதத்தை சாக்காட்டி, பின்னால் இதே போன்ற வழக்குகளும் தோன்றக்கூடும்” என்று எச்சரித்தார்.