கொரோனா கிருமி : சிறுமி குணமடைந்தார்

கெடாவின் லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் (2019-nCoV) நோய்த்தொற்றில் இருந்து சீனாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி குணமடைந்து மீண்டுள்ளார்.

மலேசியாவில் பதிவான 10 பாதிப்புகளில் ஒன்றான அச்சிறுமி, நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“முதல் முடிவைக் காட்டிலும் மீண்டும் இரண்டு முறை பரிசோதனையின் முடிவுகள் எதிர்மறையானவையாக இருந்தன. அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்” என்று நூர் ஹிஷாம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நான்கு வயதான அச்சிறுமி ஜனவரி 29 அன்று லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

குழந்தையின் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு காலத்தில் மருத்துவர்கள் மாதிரிகளை தொடர்ச்சியாக இரண்டு முறை எடுத்தனர், என்று நூர் ஹிஷாம் கூறினார்.

“இந்த 2019-nCoV நோய்த்தொற்று குணப்படுத்தக்கூடியது என்பதையும், நோயாளி முழுமையாக குணமடைய முடியும் என்பதையும் காட்டுகிறது”.

“சுல்தானா மாலிஹா லங்காவி மருத்துவமனை தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு வழங்கியதற்கும் குழந்தை நலமாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும், அரசு அம்மருத்துவமனைக்கு வாழ்த்தை தெரிவிக்கின்றது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சிறுமியும் அவரது குடும்பத்தினரும் விரைவில் சீனாவுக்கு திரும்புவதாக மலேசியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.