உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் கவலையளிக்கின்றது

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் கவலையளிக்கின்றது

பெய்ஜிங் (ராய்ட்டர்ஸ்) – சனிக்கிழமையன்று புதிய இறப்புகள் மற்றும் கொரோனா வைரஸின் பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால் தென் கொரியாவில் நோய்த்தொற்றுகள் இரட்டிப்பாகியுள்ளது; ஈரானில் 10 புதிய பாதிப்புகள். உலகளாவிய ரீதியான அதன் விரைவான பரவல் கவலையளிக்கின்றன.

சீனாவில் வெள்ளிக்கிழமை 397 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்கள் இருந்தன, இது முந்தைய நாள் 889ஆக இருந்தது. 31 பாதிப்புகள் மட்டுமே ஹூபே மாகாணத்தின் வெளியே இருந்தன.

ஆனால் தொற்று எண்ணிக்கை வேறு இடங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் கொரியா, இத்தாலி, லெபனான் மற்றும் ஈரானில் பாதிப்புகள் மோசமடைந்து வருவதால், நோய்தொற்றை உலக ரீதியில் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் கதவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கொரியா தொற்றுநோய்களின் அதிகரிப்பைக் கண்டுள்ளது. 229 புதிய உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் என்று மொத்த பாதிப்புகள் 433 ஆக உள்ளன. ஒரு தேவாலயத்தில் கலந்து கொண்ட 1,000க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டுவதால் பரவல் கணிசமாக உயரக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

இந்த வார தொடக்கத்தில் எந்தவொரு அறிக்கையும் இல்லாத ஈரானில், 10 புதிய பாதிப்புகள் காணப்பட்டன, அவற்றில் ஒருவர் இறந்துவிட்டார். இந்த எண்ணிக்கை ஈரானில் இப்போது 28 நோய்த்தொற்றுகளும் ஐந்து இறப்புகளையும் கொண்டுள்ளது.
இது சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே சுமார் 26 நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பரவியுள்ளது, ராய்ட்டர்ஸ் கணக்கின்படி 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

WHO இன் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சனிக்கிழமையன்று சீனாவுடன் தெளிவான தொடர்பு இல்லாத பாதிப்புகளைக் குறித்து கவலை தெரிவித்ததோடு, அனைத்து நாடுகளுக்கும் அவசரமாக பாதுகாப்பை பலப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்தார். மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளை ஆதரிக்க 675 மில்லியன் டாலர் ஆதரவை கோரியுள்ளார்.
“இப்போது தீர்க்கமாக செயல்பட வேண்டிய நேரம்” என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார்.

“பரவலை கட்டுப்படுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது, இல்லையென்றால், வாய்ப்பை இழந்தோமானால், நமக்கு கடுமையான பிரச்சினை காத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.

முதல் இரண்டு இறப்புகளுடன் வடக்கு இத்தாலியில் பாதிப்பு மோசமடைந்தது. 17 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில், முதல் உள்ளூர் பரவல் என்று அறியப்பட்ட பாதிப்பும் உட்பட்டுள்ளது.

ஜப்பான் சனிக்கிழமையன்று 14 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை உறுதிப்படுத்தியது. அதில் ஒரு ஆசிரியர் தனது பள்ளியில் பணிபுரியும் போது அறிகுறிகளைக் காட்டியவர்களில் ஒருவர் ஆவார்.

ஜப்பான் அதன் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸை ரத்து செய்ய வேண்டுமா என்ற கவலையும் உள்ளது. தொண்டர்களுக்கான பயிற்சியின் தொடக்கத்தை அமைப்பாளர்கள் சனிக்கிழமை முன்னெச்சரிக்கையாக ஒத்திவைத்தனர்.

புதிய சிக்கல்கள்

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 76,288 ஆக உயர்ந்தது, வெள்ளிக்கிழமை முடிவில் இறப்பு எண்ணிக்கை 2,345ஆக உள்ளது. ஹூபே 106 புதிய இறப்புகளைப் பதிவுசெய்தது, அதில் 90 பேர் வுஹானில் உள்ளனர்.