அமைதிப்பேரணி மசோதாவுக்கு எதிரான கடுமையான குறைகூறல்களுக்கு எதிர்வினையாற்றியுள்ள நடப்பில் சட்ட அமைச்சர், 1969 மே 13 கலகத்தையும் ஆகஸ்ட் மாத லண்டன் கலவரங்களையும் காரணம் காண்பித்து அதை நியாயப்படுத்தப் பார்க்கிறார்.
மசோதாவை எதிர்க்கிறீர்களா, உங்கள் எதிர்ப்பை அடுத்த பொதுத் தேர்தலில் காட்டுங்கள், பார்க்கலாம் என்றும் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் சவால் விடுத்துள்ளார்.
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் உத்துசான் மலேசியா ஆகிய நாளேடுகளில் வெளிவந்துள்ள அவரது கட்டுரையில்,மலேசியாவில் மிக மோசமான இனக்கலவரத்தை நஸ்ரி நினைவுபடுத்தியிருந்தார்.
“1969 மே 13-இன் துயரச் சம்பவங்களைக் கண்ணுற்றவர்கள் கோலாலம்பூரில் தலைவிரித்தாடிய வன்முறையை மறந்திருக்க மாட்டார்கள்.
“தலைநகரில் கொழுந்து விட்டெரிந்த நெறுப்பு அணைந்தபோது 200பேர் பிணமாகிக் கிடந்தனர்.
“வீடுகளும் கடைகளும் அழிக்கப்பட்டன. தத்துத் தடுமாறி நடக்கத் தொடங்கியிருந்த நம் நாட்டின் சிறகுகள் சீர்பண்ண முடியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டிருந்தன”, என்றாரவர்.
ஒருவழியாக அந்த இடரைக் கடந்து வந்த மலேசியா,சர்ச்சைகளைத் தெரு ஆர்ப்பாட்டங்கள் வழியாக அல்லாமல் தேர்தல்கள் வழியாக சரிசெய்துகொண்டு “21ஆம் நூற்றாண்டின் துடிப்புமிக்க” நாடாக “சகிப்புத்தன்மையும் முற்போக்குத்தன்மையும் கொண்ட” நாடாக மாறியது.
ஒன்றுகூடும் உரிமை என்பது தெருக்களில் குழப்பத்தை உண்டுபண்ணவும் சராசரி மலேசியரின் வயிற்றுப் பிழைப்பைக் கெடுப்பதற்குமுள்ள சுந்திரம் எனப் பொருள்படாது என்பது நஸ்ரியின் வாதம்.
“தெரு ஆர்ப்பாட்டம் மூலமாக ஆதாயம் காண விரும்பும் ஒரு பணக்கார அரசியல்வாதிக்கு ரிம50 அல்லது ரிம60 பெரிய பணமல்ல. ஆனால், ஒரு அங்காடி வியாபாரிக்கு அது பெரும் பணம். சாலைகள் மூடப்பட்டால் அந்த நாளில் அவரது பிழைப்பு கெட்டுப் போகும்”.
தம் வாதத்துக்கு வலுச் சேர்க்க, அண்மைய லண்டன் கலவரங்களை அடுத்து பிரிட்டிஷ் அரசு தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
“மாற்றரசுக் கட்சிகல் எதை வேண்டுமானாலும் கூறலாம், ஆனால் ஜனநாயக நாடுகளில் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமளிக்கும் சட்டமும் உண்டு சாதாரண மக்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமைக்கு இடமளிக்கும் சட்டமும் உண்டு.அதனால்தான் அவரால் (பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் தெரேசா மே) அதைச் செய்ய முடிந்தது.
“ஜெர்மனியில் போப்பாண்டவரின் வருகையின்போது கத்தோலிக்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டங்கள் அண்மையில் நிகழ்ந்தபோது அவற்றைக் கலைக்க கலகத்தடுப்புப் போலீசார் களம் இறக்கப்பட்டனர்.
உலகெங்கும் ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் அமைதிப் பேரணி மசோதா என்பதை நஸ்ரி வலியுறுத்தினார். நஸ்ரி தம் கட்டுரையில் தேர்தல் சீரமைப்புக்காகப் போராடும் கூட்டமைப்பான பெர்சே 2-ஐயும் இலேசாகத் தொட்டுக்கொண்டார்.
“அடுத்த ஆண்டில் பெர்சே விளையாட்டரங்கு ஒன்றில் பேரணி நடத்த விரும்பினால் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. அதற்கு இம்மசோதா இடமளிக்கிறது.
“யார் பேரணியைத் தடுக்கும் அதிகாரம் போலீசுக்கு இருக்கக்கூடாது என்று வாதாடினார்களோ அவர்களே இன்று அந்த அதிகாரத்தைப் போலிசாரிடமிருந்து அகற்றும் ஒரு சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
“நீங்கள் இதற்கு உடன்பட்டால் அமைதிப்பேரணி மசோதாவை ஆதரிப்பதில் எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள். உடன்படவில்லையா. பரவாயில்லை. மலேசியா ஒரு ஜனநாயக நாடு.ஆதரிக்கவும் ஆட்சேபிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு.
“ஆனால், உங்கள் மறுப்பைத் தெரிவிக்க தெருக்களை நாடிச் செல்லாதீர்கள். வாக்களிப்பில் அதைக் காண்பியுங்கள்.
“1969-இன் கரிய நாள்களுக்குப் பின்னர், மலேசியர்கள் பல தலைமுறைகளாக அதைத்தான் செய்து வந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே மலேசியா இன்று வலுவான, ஒன்றுபட்ட,முற்போக்கான ஒரு நாடாக திகழ்கிறது”, என்றாரவர்.