பெந்தோங் காவல் நிலையத்தில் 30 வயது இளைஞரின் மரணம் குறித்து விசாரிக்க சுவாராம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.
போலிஸ் காவலில் இருந்தபோது இறந்த ஜி. ஹெஸ்டஸ் கெவின் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது குறித்து ஓர் அறிக்கையில் கேள்விகளை எழுப்பியுள்ளார் சுவாராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி.
மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனமான சுவாராம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 334ன் (Seksyen 334 Kanun Acara Jenayah) கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறும் அரசாங்கத்தை கோரியுள்ளது.
“சட்டவிரோத செயல்களின் விளைவாக இறந்ததற்கான சான்றுகள் இருந்தால், குற்றவாளிகள் மீது, அவர்களின் மேலதிகாரிகள் உட்பட, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட வேண்டும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, திருடியதற்காக குற்றம் சாட்டப்பட்ட அந்நபர் ஏப்ரல் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் நேற்று இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் யூனிஸின் கூற்றுப்படி, நேற்று மதியம் 12.50 மணியளவில் அந்நபர் மூச்சு விட சிரமப்பட்டதைக் கண்ட பின் ஆம்புலன்ஸை அழைத்ததாக கூறினார்.
இருப்பினும், ஆம்புலன்ஸ் அங்கு (லாக்கப்பிற்கு) வந்தபோதே, அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், அவரது உடல் பின் பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கோவிட்-19 சோதனை நடத்தப்படும் எனவும் தெரிகிறது.
மலேசியாகினி நேற்று யூசோப்பை தொடர்பு கொண்ட போது, அவர்கள் இன்னும் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர் கோவிட்-19 நோயால் இறந்திருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இப்போதைக்கு, ‘திடீர் மரணம்’ என்ற பிரிவின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், தற்போது பரவியிருக்கும் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு குறித்து கைதிகளின் உடல்நலம் மற்றும் நலனில் சிவன் கவலை தெரிவித்தார்.
தனிப்பட்ட சுகாதார உபகரணங்கள் மற்றும் தூய்மையான சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம், அனைத்து கைதிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.