“மலேசிய அரசாங்கம் மனிதநேயமற்றது” – சுவாராம்

ஏப்ரல் 16ம் தேதி ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக மலேசிய நுழைவதை அரசு ஏற்க மறுத்து, அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பியது குறித்து சுவாராம் தன்னார்வ தொண்டு நிறுவனம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு 1951-இல் மலேசியா கையெழுத்திடவில்லை என்றாலும், மனிதநேயத்திற்கு ஏற்ப நாடு ஒரு பொறுப்பைக் கொண்டுள்ளது என்று சுவாராம் கூறியுள்ளது.

“கோவிட்-19 தொற்றுநோயை தடுக்கவே இந்த அகதிகளை திருப்பி அனுப்பியதாக இராணுவம் கூறுகிறது”.

“பிணிப்பாய்வு சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் நடைமுறைகளின் மூலம், மலேசியர்களின் பொது சுகாதாரத்தை பாதிக்காமல் அவர்களை காப்பாற்ற முடியும்”.

“எடுத்துக்காட்டாக, கியூபா நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். கியூபா, கொரோனா தாக்கிய பயணிகளைக் கொண்ட இரு கப்பலை மனித நேயத்துடன் தன் துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்து மருத்துவ உதவியும் அளிக்க முன்வந்தது. சேவைக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என்று அவர்கள் கருதுகிறார்கள்”.

“நியாயமான காரணமின்றி இந்த படகுகளை மீண்டும் கடலுக்குத் திருப்பி அனுப்பி, 200 பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மலேசியாவின் நடவடிக்கை மனிதநேயமற்ற ஒரு செயல்” என்று சுவாராம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியாவுக்கு சட்டவிரோதமாக படகு வழியாக வந்தடையும் முயற்சியில் கடலில் தத்தளித்த 200 ரோஹிங்கியா அகதிகளை ஏப்ரல் 16-ம் தேதி மலேசிய அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதற்கு முந்தைய நாள், இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடலில் தத்தளித்த பின்னர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 382 ரோஹிங்கியா அகதிகள், வங்கதேச கடற்படையினரால் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மலேசியாவிற்கு கப்பல் நுழைவதை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும், உதவி வருவதற்கு முன்பு 30க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துவிட்டதாகவும் சுவாராம் கூறியுள்ளது.

இந்த கப்பல்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதன் நியாயத்தன்மை பற்றிய கருத்துகளும் சமூக ஊடகங்களில் விவாதமாக உள்ளன.

முன்னதாக, படகுகளை ஏற்றுக்கொள்வது கோவிட்-19 பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் நாட்டிற்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியிருந்தார்.

அகதிகளின் படகை மலேசியாவின் எல்லைகளுக்கு அருகில் கொண்டுவர அரசாங்கம் அனுமதித்தால், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்று ஹசான் கூறினார்.

தற்போது மலேசியாவில் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை 150,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் அவர்களுக்கு இடமளிக்க இயலாது என்று அவர் கூறினார்.

“இதுபோன்ற சமயங்களில் ரோஹிங்கியாக்களைப் பெறுவது, அந்நியர்களுக்கும் படகுகளுக்கும் மலேசியாவின் எல்லைகளை அடைய அதிக கதவுகளைத் திறக்கும். இதனால் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும்” என்று முகமட் மேலும் கூறினார்.

‘மலேசியா ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்’

இதற்கிடையில், இராணுவ மோதல், குடியுரிமை மற்றும் ரோஹிங்கியாக்களின் இன அந்தஸ்து போன்ற பிரச்சனைகள், மலேசியா உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளின் பொறுப்பு ஆகும் என்று சுவாரம் ஒப்புக் கொண்டதாக கூறியது.

எவ்வாறாயினும், பிராந்தியத்தில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில் ஆசிய நாடுகளுக்கு மலேசியா மிகவும் முற்போக்கான முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சுவாராம் கூறியுள்ளது.

“மலேசியாவில் வாழும் அகதிகள், ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையத்தால் வழங்கப்பட்ட (UNHCR) அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மலேசிய அரசாங்கத்தால் இந்த ஐ.நா. அடையாள அட்டைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் சுவாராம் நினைவுபடுத்த விரும்புகிறது”.

“அவர்களுக்கு வேலை செய்யவோ, முறையான கல்வி மற்றும் பொது சுகாதார சேவைகளை அணுகவோ எந்த உரிமையும் இல்லை”.

“அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளுடன், அவர்கள் இன்னும் தங்கள் வாழ்க்கையையும் குடும்பங்களையும் ஆதரித்து காப்பாற்ற வேண்டும். இதனால், பெரும்பாலும் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது” என்று சுவாராம் கூறியுள்ளது.