டிஏபியில் தேர்தல்களின்போது தொகுதிஒதுக்கீட்டை முடிவு செய்வது மத்திய செயலவை (சிஇசி) தான் என்பதால் “ஞானாசிரியர்கள்” தேவையில்லை என்று பினாங்கு டிஏபி துணைத்தலைவர் பி.ராமசாமி அறிவித்துள்ளார்.
கட்சி, 2012-இல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்குத் தயாராகிவரும் வேளையில் இட ஒதுக்கீட்டை எந்தவொரு தனிமனிதரும் முடிவு செய்யக்கூடாது. டிஏபி தலைவர்கள் பலரும் அடங்கிய ஒரு குழுதான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றாரவர்.
தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடங்கள் கிடைக்கும் என உறுதிகூறும் அல்லது அறிவிக்கும் பேர்வழிகளுக்குக் கட்சியில் இடமில்லை என்று கட்சித் தலைவர் கர்பால் சிங் அண்மையில் அறிவித்துள்ளதைத் தாமும் ஒப்புக்கொள்வதாக பினாங்கின் 2ம் முதலமைச்சரான ராமசாமி கூறினார்.
கட்சித் தலைவர் என்ற முறையில் கர்பால் அப்படியொரு அறிக்கையை வெளியிட்டது சரிதான் என்று கூறிய அவர் அது தம்மை நோக்கித்தான் கூறப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளவில்லை.
“டிஏபியில் தனி அதிகாரம் செலுத்துவோர் இருக்கக்கூடாது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அதேபோல் அதற்கு ஞானாசிரியர்களும் தேவையில்லை”, என்று ராமசாமி குறிப்பிட்டார்.
“இணையத்தளமொன்றில் அறிவிக்கப்பட்டிருப்பதுபோல் அது என்னைக் குறிவைத்துச் சொல்லப்பட்டதல்ல என்றே நினைக்கிறேன். அது பற்றி கர்பாலுடன் விவாதிப்பேன்.
“எனக்கு அரசியல் நன்கு தெரியும். 25 ஆண்டுகள் அரசியல் பாடம் நடத்தும் விரிவுரையாளராக இருந்துள்ளேன்”, என்றாரவர்.
பிறை சட்டமன்ற உறுப்பினருமான ராமசாமி, ப்ரி மலேசியா டுடே(எப்எம்டி)-இல் இடம்பெற்றிருந்த கர்பாலின் அறிக்கை குறித்து இவ்வாறு கருத்துரைத்தார். அந்த அறிக்கையில் “வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவோ அவர்களின் பெயர்களையும் தொகுதிகளையும் அறிவிக்கவோ எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று கூறப்பட்டிருந்தது.
“அதைச் செய்யும் அதிகாரம் தலைமைப்பீடத்துக்கு மட்டுமே உண்டு”, என்று புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பால் அதில் கூறியிருந்தார்.
ராமசாமியை குறி வைத்தே கர்பால் அந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகக் கூறிய அவ்வலைத்தளம் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோருக்கு எதிராக கட்சி கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அவர் வலியுறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டது.
கட்சியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பில் ராமசாமி அறிவித்தார் என்று தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்தியைக் கருத்தில்கொண்டே கர்பால் அந்த அறிக்கையை வெளியிட்டதாக தெரிகிறது.
ஆனால், அது தம்மைக் குறி வைத்து விடுக்கப்பட்ட அறிக்கை என்று சொல்லப்படுவதை ராமசாமி மறுத்தார். கர்பால் சொன்னதை அந்த “இணையத்தளம் திரித்துக் கூறியுள்ளது”, என்றாரவர்.
“இது(திரித்துக் கூறல்) தொடருமானால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்”, என்று ராமசாமி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
தமிழ் நாளேடுகளின் செய்திக்கு மறுப்பு
தமிழ் நாளேடுகள் டிஏபி மூன்று இந்திய பெண் வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்திருப்பதாக தம்மை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருப்பது குறித்தும் ராமசாமி சினமடைந்துள்ளார்.
டி.காமாட்சி, கஸ்தூரி ( காலஞ்சென்ற டிஏபி தலைவர் பி.பட்டுவின் மகள்), பினாங்கைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞரான மங்களேஸ்வரி ஆகிய மூவர்தான் அவ்வேட்பாளர்கள் என ராமசாமி தெரிவித்ததாக அவை அறிவித்திருந்தன.
அம்மூவர் பற்றியும் தம்மிடம் வினவப்பட்டபோது, “கட்சி கூடுதல் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கும் வாய்ப்பு உண்டு” என்று மட்டுமே தாம் கூறியதாக பத்து கவான் எம்பியுமான ராமசாமி குறிப்பிட்டார்.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.குலசேகரன் (ஈப்போ பாராட்), சார்ல்ஸ் சந்தியாகு(கிள்ளான்), எம், மனோகரன் (தெலுக் இந்தான்) ஆகியோருக்கும் சுங்கை சட்டமன்ற உறுப்பினரான ஏ.சிவநேசனுக்கும் எதிர்வரும் தேர்தலில் ”இடம் கொடுக்கப்படுவது உறுதி” என்று கூறியதாகவும் வெளிவந்துள்ள செய்தியையும் அவர் மறுத்தார்.
“நான் எப்படி அவ்வாறு சொல்ல முடியும். அதை மறுக்கிறேன்”, என ஆத்திரத்துடன் குறிப்பிட்டார். ராமசாமி, கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமாவார்.
ராமசாமி, தாம் பிறை சட்டமன்றத் தொகுதியிலும் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடப் போவதாகக் கூறியதாகவும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த ராமசாமி, “தொகுதி ஒதுக்கீட்டை முடிவு செய்வது சிஇசிதான் என்பதுதான் என் நிலைப்பாடு. குழுவில் மற்ற உறுப்பினர்களும் இருப்பதால் தனியாக யாரும் அது பற்றி முடிவு செய்ய இயலாது”, என்றார்.
“நான் ஒன்றும் வடிகட்டிய முட்டாள் அல்ல. நான் சொன்னது திரித்துக்கூறப்பட்டுள்ளது”, என்றாரவர்.
கர்பாலைத் தொடர்புகொண்டு பேசியதற்கு, இரண்டு வாரங்களுக்குமுன் ராமசாமியை மேற்கோள்காட்டி வெளிவந்த பத்திரிகைச் செய்திகளை அடிப்படையாக வைத்தே அவ்வாறு கூறியதாகக் குறிப்பிட்டார்.
அச்செய்திகளை ராமசாமி மறுக்கவில்லை என்பதால் தாம் அப்படியோர் அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று என்றாரவர்.
ஆனால்,“அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோருக்கு எதிராக கட்சி கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று கூறப்பட்டது ஒரு பொதுவான குறிப்பு என்றும் அது ராமசாமியை குறிவைத்து சொல்லப்பட்டதல்ல என்றும் அவர் விளக்கினார்.
தாம் ராமசாமியை சாடியதாக சொல்லப்பட்டிருப்பதை அவர் மறுத்தார். அது அந்த வலைத்தளத்தின் சொந்தச் சரக்கு என்றார்.
“ கட்சி (அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோருக்கு எதிராக) கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டது அவ்வாறு செய்யும் நோக்கம் கொண்டவர்களைக் குறிவைத்துச் சொல்லப்பட்டது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஜோகூரில் நடந்ததைப் போல் மீண்டும் நிகழக்கூடாது என்பதால் அவ்வாறு கூறியதாக கர்பால் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை பக்ரி தொகுதி டிஏபி உறுப்பினர் சுமார் 20 பேர், முவாரில் ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர் “தன்னிச்சையாக செயல்படுகிறார்” என்று அவர்கள் குறைகூறினர்.
அவர்களில் பலர், ஜோகூர் டிஏபி செயலாளர் டான் சென் சூன் மக்களுக்குச் சேவை செய்யத் தவறிவிட்டார் என்றும் கூறினார்.
பூ-வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்குக்கு அறைகூவல் விடுத்தனர்.