“ஞானாசிரியர்கள்” தேவைதான், கர்பால்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், மூத்த தலைவர்களை ஞானாசிரியர்கள் என்று குறிப்பிடுவது தகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் முன்னேற்றத்துக்கு இப்படிப்பட்ட மூத்தவர்களும் தேவைதான் என்றாரவர்.

ஞானாசிரியர்கள் என்ற சொல் தப்பாக அர்த்தம் செய்துகொள்ளப்படலாம் என்று கூறிய கர்பால், கட்சிக்கு அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர்தான் தேவையில்லை என்றார்.

அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர், மத்திய செயலவை முடிவு செய்யும் முன்னரே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடம் உண்டு என்று வாக்குறுதி அளிக்கிறார்கள், அவர்களுக்கு இந்தந்த தொகுதிகள்தான் என்பதையும் அறிவிக்கிறார்கள் என்றாரவர்.

ஆனால், ஞானாசிரியர்கள் என்பவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே கட்சியைக் கட்சியைக் கட்டிக்காத்து வளர்த்து வந்திருப்பவர்கள் என்று புக்கிட் குளுகோர் எம்பியுமான கர்பால் கூறினார்.

“இன்றைய டிஏபி தலைவர்கள் அந்தப் பதவிகளில் இருப்பதற்குக் காரணமே அந்த ஞானாசிரியர்கள்தான்”, என்று மலேசியாகினியிடம் கர்பால் தெரிவித்தார்.

மூத்த தலைவர்களின் உழைப்பால் ராமசாமி போன்ற தலைவர்கள் நன்மை அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட கர்பால், ஞானாசிரியர்கள் இன்றி அவரைப் போன்ற தலைவர்கள் பதவிக்கு வந்திருக்க  முடியாது. ஏனென்றால் கட்சி உறுப்பினர்கள் அவர்களின் சுய வலிமையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. கட்சியின் வலிமையில்தான்  தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்”, என்றார்.

பினாங்கு துணை முதல்வருமான பி. ராமசாமி டிஏபி-க்கு அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோரும் தேவையில்லை, ஞானாசிரியர்களும் தேவையில்லை என்று கூறியிருப்பது குறித்து கர்பால் இவ்வாறு கருத்துரைத்தார்.

ராமசாமி டிஏபி-இன் மூத்த தலைவர்கள் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தொகுதி ஒதுக்கீடு தனி ஒரு தலைவரால் முடிவு செய்யப்படாது என்றும் டிஏபி தலைவர்கள் பலரும் அடங்கிய ஒரு குழுதான் அதை முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தார்.

ராமசாமி தமக்கு வேண்டியவர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார் என இரண்டு வாரங்களுக்குமுன் தமிழ் நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அதை அவர் மறுத்தார்.

செய்தித்தாள்கள் தாம் சொன்னதைத் திரித்துக்கூறிவிட்டதாகக் குறிப்பிட்ட ராமசாமி, தொகுதி ஒதுக்கீடு செய்வது மத்திய செயலவையின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றே எப்போதும் கூறிவந்திருப்பதாகவும்  சொன்னார்.

அதே செய்தி ப்ரி மலேசியா டுடே இணையத் தளத்திலும் வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டி அதையும் மறுப்பதாக ராமசாமி கூறினார்.

ராமசாமியின் மறுப்புப் பற்றிக் குறிப்பிட்ட கர்பால், ஊடகங்கள் தாம் சொல்லியதைத் திரித்துக்கூறிவிட்டதாக உடனடியாக அவர் ஓர் அறிக்கை விட வேண்டும் என்றார். “இதுவரை திருத்தம் எதுவும் வெளியானதாக தெரியவில்லை. அவர்தான் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்”, என்று கர்பால் குறிப்பிட்டார்.

TAGS: