அம்னோ தலைவர் மற்றும் முன்னாள் துணைப் பிரதமருடைய மகளுமான நூருல்ஹிதாயா அகமட் ஜாஹிட், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றத்திற்காக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படுவார்.
சட்டத்துறை அலுவலகம் நூருல்ஹிதாயா மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமது தெரிவித்தார்.
“இந்த முடிவை சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ளது. நூருல்ஹிதாயா இந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்” என்று அவர் கூறினார்.
கடந்த மாதம், நூருல்ஹிதாயா மற்றும் அவரது கணவர் சைபுல் நிஜாம் முகமட் யூசோபும், பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமதுவுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது கூட்டத்தில் கலந்து கொள்ள காவல்துறையினரிடமிருந்து அனுமதி பெற்றதாக நூருல்ஹிதாயா நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹுசிர், “சட்டத்துறை அலுவலகத்தினால் (ஏஜிசி) முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று மட்டுமே பதிலளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக 2020 ஆம் ஆண்டு தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஒழுங்குமுறையின் விதி 3(1) இன் கீழ் போலீசார் ஒரு ஆவணத்தை ஏப்ரல் 25 ஆம் தேதி திறந்துள்ளனர்.