நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை தளர்த்திய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மே 4ம்தேதி வாணிப தொழில்களையும் தொடங்க அனுமதி அளித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் நாட்டுக்கு இழப்பும், மக்களிடையே குழப்பமுமே மேலோங்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
பெரிய பொருளாதார மற்றும் உயிர் இழப்புகளைக் கடந்து, 6 வாரகால அடைப்புக்குப் பின் மேற்கொள்ளப் படும் எச்செயலும் நோய் தடுப்புக்குப் பாதகமாக அமையக் கூடாது. அவை இதுவரை மக்கள் செய்துள்ள தியாகத்தை ஒன்றுமில்லாதாக ஆக்கிவிடும் என்கிறார் சேவியர் ஜெயக்குமார். அதோடு பல வினாக்களுக்கு போதுமான விளக்கத்தை அரசாங்கம் தர வேண்டும் என்கிறார். அவற்றில் சில.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களிடையே எழுந்துள்ள மிக முக்கியக் கேள்வி, கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?
மீண்டும், நோய் தொற்று பெரிய அளவில் பீடிக்க வாய்ப்பில்லை என்று அரசாங்கம் கருதுகிறதா?
திடீர் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வு என்பது ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏற்பட்ட இரண்டாம் கட்டப் பாதிப்புகள் போன்ற அபாயத்தை நம் நாடும் எதிர்நோக்காது என்பதற்கு என்ன உத்தரவாதமுண்டு?
அப்படி ஒரு ஆபத்தான அவசரத் தேவை மீண்டும் ஏற்பட்டால் அதனை முழு அளவில் சமாளிக்கப் போதுமான மருந்துகள், தடுப்பு சாதனங்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் உண்டா?
நடமாட்டக் கட்டுப்பாடுகளை நீக்கித் தொழில் துறைகளை மீண்டும் தொடக்கச் சுகாதாரத் துறை இசைவு தெரிவித்ததா? அப்படி நிலைமை மீண்டும் மோசமடைந்தால் அதனைச் சமாளிக்கும் ஆற்றல் நமது சுகாதாரத் துறைக்கு உண்டா?
அண்டை நாடுகளில் குறிப்பாக இந்தோனிசியாவில் நோய் தாக்கம் கட்டுக்கு அடங்காமல் உள்ளது. மலேசியாவில் கட்டுமானத் தொழில்கள் இந்தோனிசியர்கள் ஆதிக்கத்தில் இருப்பதால் மீண்டும் முழு அளவில் தொழில்களைத் தொடங்குவது அவர்களின் கள்ளத்தனமான வருகைக்கு வழிவிடாதா? நாட்டில் கொரோனா நோய் தொற்றுக்கும் வழி வகுக்காதா?
நோய் தொற்று மாவட்டங்களை அடையாளப்படுத்திப் பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற நோய் தாக்கத்தை அடிப்படையாக (வர்ணம் பேதம்) விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏன் தொழில்களை மீண்டும் திறக்கும் பொழுது பயன்படுத்தப் படவில்லை.
தான் தயக்கத்துடன் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருப்பதாக அறிவித்துள்ள பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் இதற்கு முக்கியக் காரணமாகப் பொருளாதார முடக்கத்தால் நாட்டுக்கு ரிங்கிட் 63 பில்லியன் (6300 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தக் கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தால் கூடுதலாக 35 பில்லியன் (350 கோடி) ரிங்கிட் இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் நாட்டு பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பைக் கவனத்தில் கொண்டு தயக்கமுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ள பிரதமர், இப்படிப்பட்ட ஒரு இக்கட்டை சமாளிக்க ஏன் முழு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி, நல்ல விவாதத்திற்குப் பின் துணிவுடன் சிறந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது?
நாடாளுமன்றத்தால் இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண முடியாதா? அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் எதற்கும் உதவாதென எண்ணுகிறனரா பிரதமர்?
நாட்டின் மற்றத் தொழில்கள் மீண்டும் தொடங்கிச் செயல்பட அனுமதியளிக்கப்பட்ட பின்பும் கூட, நாடாளுமன்ற அட்டவணைப்படி நடக்க வேண்டிய கூட்டங்களைத் தள்ளிப்போட்டு, ஒரு நாள் மட்டும் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நாடாளுமன்றத்தைக் கூட்டுவது ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பாகும் என்கிறார் அவர்.