மலேசியா ஒரு கூட்டாட்சி நாடு என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் – ஹசான் அப்துல் கரீம்

மலேசியா ஒரு கூட்டாட்சி நாடு என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தினார் மாநில-கூட்டாட்சி உறவுகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான சிறப்புக் குழுவின் தலைவரான ஹசான் அப்துல் கரீம்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை தளர்த்துவதற்கும் பொருளாதாரத் துறையை மீண்டும் திறப்பதற்குமான ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன், அனைத்து மாநிலங்களையும் சந்தித்து கலந்தாலோசிக்குமாறு மத்திய அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார் பசீர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசான் அப்துல் கரீம்.

பல மாநிலங்கள் மத்திய அரசாங்கம் பரிந்துரைத்த நடமாட்டக் கட்டுப்பாடு மீதான தளர்வுகளை அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியிருக்கின்றன. அவை, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை தொடர்ந்து பராமரிப்பதாகவும் அறிவித்துள்ளன.

“இந்த அணுகுமுறை மலேசியா போன்ற ஒரு கூட்டாட்சி நாட்டிற்கு நல்லதல்ல” என்று அவர் கூறினார்.

“கூட்டாட்சி நாடு எனும் மனப்பான்மையில், மிக முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் மாநில அரசாங்கங்களின் கருத்துகளை கருத்தில் எடுத்துக்கொண்டபின், நடமாட்டக் கட்டுப்பாடை முடிவுக்குக் கொண்டுவரவும், பொருளாதாரம் மற்றும் பொதுத்துறையை மீண்டும் திறக்கவும் மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.”

நேற்று பிற்பகல் சரவாக், சபா, பினாங்கு, பகாங், கிளாந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் இன்று (திங்கட்கிழமை) தளர்வுகளை அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்கி, பொருளாதாரத் துறையை மீண்டும் திறக்கவில்லை என்றும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை தொடரும் என்றும் அறிவித்துள்ளன.