தலைமைத்துவத்தில் தோல்விகண்டுள்ளார் பொருளாதார அமைச்சர் – அம்னோ

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி.) சீராகவும் முழுமையாகவும் ஒருங்கிணைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்னோ துணைத் தலைவர் முகமட் காலீத் நோர்டின்.

நடமாட்டக் கட்டுப்பாடு மீதான தளர்வுகளை மத்திய அரசு அறிவிப்பு செய்த போதிலும், சில மாநிலங்கள் அதை பின்பற்றாததை தொடர்ந்து அவர் இதை கூறியுள்ளார்.

“அனைத்து மாநில அரசாங்கங்களுடனும் ஆலோசித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பின்னரே இந்த முக்கியமான முடிவை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் அது அப்படி செயல்படுத்தப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது.”

“இந்த தோல்விகள், தலைமைத்துவம் மற்றும் தேசிய பொருளாதார மீட்பு தொடர்பான ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க பலவீனங்களைக் காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.

பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், காலித், பொருளாதார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி மீது இக்குற்றச்சாட்டை வைக்கிறார் என்று தெரிகிறது.

“பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான ஒரு மூத்த அமைச்சர், முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து மாநில அரசாங்கங்களுடனும் கலந்துரையாடவும், ஆலோசிக்கவும், ஒருமித்த கருத்தை பெறவும் தவறி உள்ளார்” என்று அவர் கூறினார்.

மாநில அரசாங்கங்களுடனான மத்திய அரசின் உறவு, ஒரு புதிய இயல்பைக் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“அனைத்து ஏகாதிபத்திய ஆதிக்க சக்தியும், ஆட்சியும், மத்திய அரசின் கீழ் உள்ள சகாப்தம் முடிந்துவிட்டது” என்றும் அவர் கூறினார்.

நேற்று பிற்பகல், சரவாக், சபா, பினாங்கு, பகாங், கிளாந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள், இன்று (திங்கட்கிழமை) மத்திய அரசு அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வுகளை அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்குவதாகவும் பொருளாதாரத் துறையை மீண்டும் திறக்கவில்லை என்றும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை தொடரும் என்றும் அறிவித்தன.