பொது போக்குவரத்து பயனர்கள் சேவையைப் பயன்படுத்தும் போது, முகக்கவரி அணிய வேண்டியது அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் விளக்கினார்.
பொது போக்குவரத்தில் முகக்கவரிகளைப் பயன்படுத்துவது குறித்து தனது அமைச்சுக்கு நிபுணர் ஆலோசனை கிடைத்ததாக வீ கூறினார்.
“இது கட்டாயமானது (முகக்கவரி அணிவது) என்று சட்டபூர்வமாக சொல்வது கடினம் என்றாலும் போக்குவரத்துக்கு நாங்கள் கட்டாயமாக்கியுள்ளோம்.”
“முகக்கவரியை அணிவது எவ்வாறு கோவிட்-19-ல் இருந்து தடுக்க உதவுகிறது என்பது குறித்து நிபுணர்களின் கருத்தை நாங்கள் ஏற்கனவே பெற்றுள்ளோம்.”
“மக்களின் பாதுகாப்பிற்கு இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன்” என்று இன்று காலை கோலாலம்பூரின் புக்கிட் பிந்தாங் எல்ஆர்டி பொது போக்குவரத்து சேவையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.
பொது பயண சேவைகளை எளிதாக்குவதற்கும், நிறுவனம் சீராக இயங்குவதற்கும் பொது போக்குவரத்து சேவைகள் குறித்த சில வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படும் என்று வீ முன்பு கூறியிருந்தார்.
இதற்கிடையில், அதிக உடல் வெப்பநிலை இருப்பதாகக் கண்டறியப்படும் பொது போக்குவரத்து பயனர்கள், சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று வீ மேலும் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அவர் என்றார்.