நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வு: பொருளாதார முடிவா, அரசியல் நோக்கமா!

இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 4 கட்டங்களாக அமல் செய்யப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை தளர்த்துவதற்கு அரசாங்கம் செய்த முடிவு நாடு தழுவிய நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீழ்ச்சி கண்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளச் செய்வதற்குத்தான் இம்முடிவு என அரசாங்கம் நியாயப்படுத்துகிற போதிலும் ஆளும் கூட்டணியின் சுயநல அரசியல் நோக்கமே இதன் பின்னணி என பிறிதொரு சாரார் வாதிடுகின்றனர்.

4ஆம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு எதிர்வரும் மே 12ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என பிரதமர் முஹிடின் யாசின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

ஆனால் கடந்த மே 1ஆம் தேதி தமது தொழிலாளர் தின உரையின் போது, இந்தத் தளர்வு குறித்து அவர் செய்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தனியார் வாகனங்களில் இருவர் பயணிக்க இனி அனுமதி வழங்கப்படுகிறது என அதற்கு முதல்நாள்தான் சுகாதார அமைச்சர் அடாம் பாபா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல கட்டுப்பாடுகளை உள்ளடக்கி இத்தளர்வு அமலாகிறது என முஹிடின் கூறுகிற போதிலும், சில மருத்துவ வல்லுநர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இதனை ஆபத்தாகவே கருதுகின்றனர்.

திரைமறைவில் அரங்கேறிவரும் அரசியல் சித்து விளையாட்டினால் புதிய அரசாங்கம் இன்னமும் வலுவான ஒரு நிலையை அடையாமல் இருப்பது நாட்டு மக்கள் உணராமல் இல்லை.

இந்த சூழலில் எந்நேரத்திலும் அரசாங்கம் கவிழ்ந்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்படக்கூடிய சாத்தியத்தையும் மக்கள் அறியாமல் இல்லை.

அத்தகைய ஒரு நிலை ஏற்படுமேயானால் மக்களின் ஆதரவை, குறிப்பாக மலாய்க்காரர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே இந்தத் தளர்வு என்று பரவலாக நம்பப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவே இவ்வாண்டின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை டிசம்பர் மாதம் வரையில் ஒத்திவைத்துள்ள நிலையில் மலேசியர்கள் தங்குதடையின்றி இம்மாதமே அப்பெருநாளை கொண்டாடுவதற்கு முஹிடின் இதன் வழி வகை செய்துள்ளார்.

மிகத் துல்லியமாக ஆராய்ந்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது என அனைத்துலக தொழில் துறை அமைச்சர் அஸ்மின் அலி நியாயப்படுத்தும் அதே வேளை, அவசர அவசரமாக நாங்கள் இந்த முடிவுக்கு வரவில்லை என நிதியமைச்சர் தெங்கு சஃப்ருல் கூறுகிறார்.

ஆனால் இந்த திடீர் மாற்றம் நாட்டுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும் என எச்சரிக்கும் பல மருத்துவ நிபுணர்கள், கட்டம் கட்டமாக, மெது மெதுவாகத்தான் இந்தத் தளர்வை அமலாக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

இதுபோன்ற அவசர முடிவுகளினால் ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், கனடா முதலிய நாடுகள் 2ஆம் கட்ட நோய் தாக்குதலில் தற்போது அவதிப்படுவதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

முஹிடின் அவசரப்பட்டுவிட்டார் – இதனால் நிலைமை மோசமாகி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தலைமைச் செயலாளர் சோலமனும் கூட தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நிலைமை இவ்வாறு இருக்க, முஹிடின் தமது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என நிகழ்நிலை வாயிலாக தொடங்கப்பட்டுள்ள ஒரு மனுவுக்கு இதுவரையில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அரசாங்கத்தின் முடிவுக்கு தற்போதைக்கு தாங்கள் முழுமையாக கட்டுப்படப்போவதில்லை என பஹாங், பினேங், சபா, சரவாக், கெடா, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் அறிவித்துள்ளதானது நிலைமையை மேலும் சற்று சிக்கலாக்கியுள்ளதை நாம் மறுக்க இயலாது.