“சிறார் திருமணத்தை தடை செய்யுங்கள், பழைய அரசாங்கத்தின் நல்ல முயற்சிகளைத் தொடருங்கள்” அசலினா

தேசிய கூட்டணி முந்தைய அரசாங்கத்தின் நல்ல முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று அம்னோ உறுப்பினர் அசலினா ஓத்மான் தெரிவித்தார்.

குழந்தை திருமணங்களை தடை செய்வதில் பி.என். வெற்றி பெறுமா என்றும், அம்னோ இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமா என்றும் கேட்டபோது அவர் இதனை கூறினார்.

“… ஷரியா சட்டம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் மாநில அளவில் தீர்க்கப்படும். இதை நிவர்த்தி செய்ய சுல்தான் அல்லது அரசாட்சியாளர்களின் சபை மிகவும் பொருத்தமான தரப்பாகும்”.

“எவ்வாறாயினும், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக நல அமைச்சு இதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அம்னோ உட்பட அனைத்து தொடர்புடையவர்களுடனும் தொடர்ந்து உரையாடலை நடத்த வேண்டும் என்றும் நான் நம்புகிறேன்.”

“பாக்காத்தான் அரசாங்கத்தின் நல்ல முயற்சிகள் தொடரப்பட வேண்டும்,” என்று அவர் மலேசியாகினிக்கு ஒரு மின்னஞ்சல் பேட்டியில் கூறினார்.

சிறுவர் திருமண பிரச்சினைகளை கையாள்வதற்கான திசை குறித்தும், அவை புறக்கணிக்கப்படுவதாகவும், அமைச்சின் முன்னாள் துணை அமைச்சர் ஹன்னா யோ கவலை தெரிவித்திருந்தார்.

சிறார் திருமணத்தை ஆதரித்து துணை அமைச்சர் சித்தி ஜைலா முகமட் யூசோப் முன்பு பதிவு செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து யோ இந்த விஷயத்தை எழுப்பியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சித்தி ஜைலா, 2017ல் மொத்தம் 1,845 பேர் அப்படியான திருமணத்தில் ஈடுபட்டனர் என்றார்.

அதில், மொத்தம் 52.5 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர்களும், 47.5 சதவீத முஸ்லிம்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

அந்த 52.5 சதவீதத்தில், 39.6 சதவீதம் பேர் சீனர்கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், முன்னாள் சட்ட அமைச்சராக இருந்த அசலினா, சிறுவர் பாலியல் கொடுமையை நியாயப்படுத்த சித்தி ஜைலா மதத்தைப் பயன்படுத்தக்கூடாது, என்று கூறியிருந்தார்.