’10 கி.மீ சுற்றளவு’ கட்டுப்பாடு இனி இல்லை – இஸ்மாயில் சப்ரி

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து 10 கிலோமீட்டருக்குள் மட்டுமே செல்ல வேண்டிய விதி இனி நடைமுறையில் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறினார்.

எவ்வாறாயினும், இன்றுமுதல் நடைமுறையில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) கீழ், மாநில எல்லை தாண்டிய பயணங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தொடங்கப்பட்டது என்றும், இது ஐந்தாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி 5) என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறினார். இதன் அமலாக்கத்துடன், நான்காம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி 4) கீழ் உள்ள விதிமுறைகள் இதோடு ரத்து செய்யப்படுகின்றன எனவும் அறிவித்தார்.

எனவே, அனைத்து தரப்பும் பி.கே.பி 5-இன் கீழ் உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

“எந்தவொரு தரப்பினரும் இன்னும் பி.கே.பி 4 விதிகளை பின்பற்ற விரும்பினால், அது தவறு என்றும், இது புதிய பி.கே.பி 5 விதிகளால் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

“இப்போது அனைத்து மாநிலங்களும் பி.கே.பி 5-க்கு உட்பட்டுள்ளன. அவர்கள் மாநில அளவில், இதை அறிந்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அனைவரும் பி.கே.பி 5-க்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்று அவர் கூறினார்.

இன்று தொடங்கி நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அல்லது பி.கே.பி. 5 செயல்படுத்தப்படுவதன் மூலம், கிட்டத்தட்ட அனைத்து பொருளாதார மற்றும் சமூகத் துறைகளும் மீண்டும் திறக்கப்பட்டன.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, முக்கியமான நோக்கங்களுக்காக ஒரு வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களை வெளியேற அனுமதிக்கிறது. முன்னதாக பி.கே.பி. 4-ன் கீழ் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) பி.கே.பி. 5-க்கு இன்னும் பொருந்தும் என்றும் மீறுபவர்களுக்கு அபராதம் முந்தைய பி.கே.பி.-யைப் போலவே இருக்கும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

“சட்டம் அப்படியே தான் உள்ளது. RM1,000க்கு மிகாமல் அபராதம், ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, அல்லது இரண்டும். மேலும், பரிந்துரைக்கப்பட்ட SOPஐப் பின்பற்றாத வணிகங்கள், மூடப்படலாம்” என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சொந்த ஊரிலிருந்து நகரங்களுக்கு திரும்பும் பயணங்களின் அட்டவணை குறித்து கருத்துத் தெரிவித்த அவர், காலக்கெடுவைத் தவறவிட்ட எந்தவொரு நபரும் தங்கள் பயணங்களுக்கு காவல்துறையினரிடம் அறிக்கை அல்லது அனுமதி பெற வேண்டும் என்றார்.

“முன்னதாக, நாடு முழுவதும் மக்கள் காவல்துறையினரின் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. “காலக்கெடுவுக்குப் பிறகு, பயணத்தை அனுமதிப்பது காவல்துறையினரின் முடிவில் உள்ளது.”

இதனிடையே, நேற்று மலேசிய காவல்துறை மற்றும் மலேசிய ஆயுதப்படை, பி.கே.பி.-யை மீறிய 401 நபர்களை தடுத்து வைத்துள்ளனர் என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். நேற்று வரை பி.கே.பி.-யைப் மீறிய மொத்த கைதுகளின் எண்ணிக்கை 24,081 என்று அவர் கூறினார்.

இன்றுவரை, 244 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், 18,218 நபர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், நேற்று நாடு திரும்பி 265 மலேசியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.