சரவாக் கூச்சிங்கில் இதுவரை 37 நேர்மறையான பாதிப்புகள் சம்பந்தப்பட்ட புதிய கோவிட்-19 தொற்று குழுமம் (கிளஸ்டர்) கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த புதிய குழுமத்திற்கு ‘தாமான் பி.டி.சி. குழுமம்’ (‘Kluster Taman BDC’) என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
பிப்ரவரி பிற்பகுதியில் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் நடந்த ஒரு தப்லீக் கூட்டத்துடன் இந்த புதிய குழு இணைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
“இது ஸ்ரீ பெட்டாலிங் கூட்டத்துடன் தொடர்புடையது. நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் (index case) அக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பின்னர் அவரது குடும்பத்தினர், கூச்சிங்கில் உள்ள மசூதி சபை மற்றும் அவரது நண்பர்களைப் பாதித்திருக்கிறார்.”
“இதுவரை, இந்த குழுவின் தொற்று சங்கிலி மூன்று தலைமுறைகள் வரை பாதித்துள்ளது,” என்று அவர் இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மார்ச் 8-ஆம் தேதி, தாமான் பி.டி.சி.-யில் உள்ள அந்நபர், நேர்மறையாக சோதிக்கப்பட்டதாகவும் பின்னர் அதிகமான பாதிப்புகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டன என்றும், இதன் விளைவாக இந்த புதிய குழுமம் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சுகாதார அமைச்சு நிருபர்களுக்கு தகவல் கொடுத்தது.