கிறிஸ்துவ தரப்புகள் விபச்சாரத்துக்கு இடமளிக்கின்றன

கிறிஸ்துவத் தரப்புகள் “மதமாற்ற இயக்கத்தை” நடத்தி வருவதாக பல்லவி பாடும் மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று மேலும் ஒரு படி முன்னே சென்று அத்தரப்புகள் ஆண்களும் பெண்களும் கட்டுப்பாடற்ற முறையில் கலந்துறவாட ஊக்குவிப்பதாகவும் விபச்சாரத்துக்கு இடமளிப்பதாகவும் கூறியுள்ளது.

நேற்று அந்நாளேடு திங்கள்கிழமைதோறும் இடம்பெற்றுவரும் ‘Bicara Isnin’ பத்தியில் “மதமாற்ற இயக்கம்” நடைபெறுவதாகக் கூறி அது பற்றி விரிவாக எழுதியிருந்தது.

இன்று இடம்பெற்றுள்ள அப்பத்தியின் இரண்டாம் பகுதியில், கிறிஸ்துவத் தரப்புகள் மீது வேறு வகை குற்றச்சாட்டுகளை அடுக்கிய சினார், Matlamat gerakan Kristian (கிறிஸ்துவ இயக்கத்தின் நோக்கங்கள்) என்று தலைப்பிட்டு  கட்டம்கட்டி வெளியிட்டிருந்தது.

அதில் “முஸ்லிம்களை ஒழிப்பதற்கான” திட்டங்கள் என்று கூறி அவற்றில் நான்கை அது பட்டியலிட்டிருந்தது:

1.சமூக இயக்கம்: ஆணும் பெண்ணும் கட்டுப்பாடின்றிப் பழகுவதை ஊக்குவித்தல்;

2.ஒழுக்கத்தைக் கெடுக்கும் நடவடிக்கைகள்;

3.விபச்சாரம் ஒருவகை சேவைத்தொழிலாக நடைபெற இடமளித்தல்;

4.திரைப்படங்கள் மற்றும் இசை.

இவை பற்றி அது விரிவாக விளக்கவில்லை.

இந்தப் பத்தி இடம்பெற்றுள்ள அதே பக்கத்தில், இஸ்லாமிய என்ஜிஓ-வான ஜமா இஸ்லா மலேசியா (ஜிம்) தலைவர் சைட் கமருடின்(இடம்) மலேசிய ஷியாரியா வழக்குரைஞர் மன்றத் தலைவர் ஈசா ரலிக் ஆகியோரை மேற்கோள் காட்டி இரண்டு செய்தி அறிக்கைகளையும் அந்நாளேடு வெளியிட்டிருந்தது.

சைட், மதமாற்ற நடவடிக்கை மோசமாகுமுன்னர் தொடக்கத்திலேயே அதிகாரிகள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஈசா, முஸ்லிம்களிடம் இஸ்லாம்-அல்லாத சமயங்களைப் பரப்புவது அரசமைப்புப்படி குற்றமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

நேற்று அந்நாளேடு அதன் முதல் பக்கத்தில் “மதமாற்றம் இயக்கம்” துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் நடப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

அதன் தொடர்பில் முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின், இன்று உத்துசான் மலேசியாவில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், கிறிஸ்துவ அமைப்புகளின் மதமாற்ற நடவடிக்கைகளை மலாய் ஆட்சியாளர் மன்றம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

மலேசியாவை இன்னொரு இந்தோனேசியாவாக மாற்றும் நோக்கில் மதமாற்றம் “நுட்பமாகவும், திறமையாகவும், துணிச்சலாகவும், முனைப்புடனும்” செய்யப்பட்டு வருகிறது என்று சைனுடின்(வலம்) கூறினார்.

“அவர்களின் நோக்கமெல்லாம் ‘மலேசிய மலாய்க்காரர்கள்-ஒன்றே மதம்’ என்றிருப்பதை இந்தோனேசியாவில் உள்ளதுபோல் ‘ஒரு நாடு ஒரே இனமல்ல’என்று மாற்றுவதுதான்”.

சமயத்தைப் பரப்புவதில் இஸ்லாமிய தரப்புகளும் கிறிஸ்துவ தரப்புகளும் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளை ஒப்பிட்ட சைனுடின், கிறிஸ்துவர்கள் துடிப்புடனும் முற்போக்காகவும் நடந்துகொள்வதாகவும் இஸ்லாமிய தரப்புகள் பழம் போக்கில் செல்வதாகவும் நடப்புத்தேவைகளுக்கு ஏற்ப திறமையாக நடந்துகொள்வதில்லை என்றும் கூறினார்.