மலாக்காவின் யாங் டி-பெர்துவா பதவிக்கு அரசியல்வாதி வேண்டாம் – இப்ராஹிம் அலி

மலாக்காவின் யாங் டி-பெர்துவா நெகேரி (Yang di-Pertua Melaka) பதவியை ஒரு அரசியல்வாதிக்கு பதிலாக சட்டத்துறை, தேசிய பாதுகாப்பு துறை அல்லது கல்வித்துறையை சார்ந்தவர்களில் ஒருவர் நிரப்ப வேண்டும் என்று புத்ரா கட்சி முன்மொழிந்துள்ளது.

முன்பு போலவே, அரசியல்வாதிகளை அப்பதவியை வகிக்க நியமிக்கும் பாரம்பரியத்தை அரசாங்கம் ஒழிக்க வேண்டியது தேவையான ஒன்று என்று புத்ரா கட்சியின் தலைவரான இப்ராஹிம் அலி கூறினார்.

“மலாக்கா மாநிலத்தின் யாங் டி-பெர்துவா நெகேரி அல்லது அரசர்கள் இல்லாத எந்த மாநிலங்களிலும், இதுபோன்ற பதவிகளை, சட்டத்துறையைச் சார்ந்த பிரமுகர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற காவல் அல்லது இராணுவ வீரர்கள் அல்லது கல்வித்துறையைச் சார்ந்த பிரமுகர்கள் நிரப்ப வேண்டும் என்று புத்ரா கட்சி கருதுகிறது.”

“முன்னாள் அரசியல் பிரமுகர்களைத் தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் முன்னாள் அரசியல் பிரமுகர்கள் மாநில யாங் டி-பெர்துவா அல்லது ஆளுநர் பதவியை நிரப்ப ஏற்புடையவர்கள் அல்ல.”

“முன்னாள் தலைமை நீதிபதி போன்ற சட்டத்துறை நபர், எடுத்துக்காட்டாக, துன் அகமட் பைருஸ் அல்லது முன்னாள் மாநில செயலாளர் துன் அகமட் சர்ஜி, முன்னாள் மாநில காவல்துறைத் தலைவர் துன் ஹானிப் ஓமர் மற்றும் பல அரசியல் சாராத நபர்களைக் கருத்தில் கொள்ளலாம்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநிலத் தலைவர் டாக்டர் முகமட் காலீல் யாகோப்பின் பதவிகாலம் ஜூன் 4, 2020 அன்று முடிவடைகிறது.

முகமட் காலீலுக்குப் பதிலாக மலாக்காவின் புதிய யாங் டி-பெர்துவா பதவிக்கு, டாக்டர் மகாதிர் முகமதுவின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜாஹிட் மாட் அரிப் உட்பட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.